

கோவை: கோவையில் காலி இடத்துக்கு வரி விதிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மாநகராட்சி வரி வசூலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று கைது செய்தனர்.
கோவையைச் சேர்ந்த பிரகாஷ், சுந்தராபுரத்தில் மினி திரையரங்கு கட்ட 39 சென்ட் காலி நிலத்தை வாடகைக்காக பெற்றார். அதில் கட்டிடம் கட்டுவதற்கு முன்பாக, காலி மனை இட வரி செலுத்துவதற்காக சுந்தராபுரத்தில் உள்ள வரிவசூல் மையத்தில் வரி வசூலராக பணியாற்றிவரும் யமுனா தேவியை அணுகினார். அவர் ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரகாஷ் இதுகுறித்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனைபேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை யமுனா தேவியிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த கூடுதல் எஸ்பி ராஜேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக யமுனாதேவியை பிடித்து கைது செய்தனர்.