

கோப்புப் படம்
சென்னை: ஐம்பொன் சிலை வாங்க, ஆந்திராவிலிருந்து சென்னை வந்த 4 பேரிடமிருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.1.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, மாதவரம் ரவுண்டானா அருகே நேற்றுமுன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
அதில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.90 லட்சம் இருந்தது தெரிந்தது. அதை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், காரில் பயணம் செய்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
இதில், அவர்கள் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த நாகேஸ்வரராவ், சுதா, சுப்பாராவ், வெங்கடேஷ்வரராவ் என்பது தெரிந்தது. நாகேஸ்வரராவ் தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
மேலும், இவர் தனது சொந்த ஊரில் கோயில் ஒன்று கட்டி வருவதும், கோயிலுக்காக ஐம்பொன் சிலை வாங்க சென்னை, பாரிமுனை, தேவராஜ் முதலி தெருவில் உள்ள கடை ஒன்றுக்கு பணத்துடன் வந்ததும் தெரிய வந்தது. அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அதனை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.