

சென்னை: உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி பிரச்சினைகளுக்கான 198 மருந்துகள் தரமற்றவையாகவும், போலியாகவும் இருந்தது, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து மாத்திரை, மருந்துகளையும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.
அப்போது, தரமற்ற, போலி மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அதில், உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி, கிருமி தொற்று, அஜீரண பிரச்சினைகள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 198 மருந்துகள் தரமற்றவையாகவும், 4 மருந்துகள் போலியானதாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.
அந்த விவரங்கள், பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்க மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.