

சென்னை: மயிலாப்பூர் திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மந்தைவெளிப்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சத்தியமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
500 ரூபாய் நோட்டு கட்டு
இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர், வருமான வரித்துறையினருடன் இணைந்து நேற்று காலை அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, வீட்டின் சமையல் அறையில் ரூ.70 லட்சம், படுக்கை அறையில் ரூ.80 லட்சம் என 500 ரூபாய் நோட்டு கட்டுகளாக மொத்தம் ரூ.1.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆவணங்களும் பறிமுதல்
மேலும், யார் யாருக்கெல்லாம் பணம் விநியோகம் செய்யப்பட்டது என சில அரசியல் கட்சிகளின் பெயர், கட்சி பிரதிநிதிகள் பெயர் அடங்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சோதனைக்கு உள்ளான சத்தியமூர்த்தி, மயிலாப்பூர் திமுக வேட்பாளரின் உதவியாளர் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.