

சென்னை: டேட்டா என்ட்ரி வேலை என்ற பெயரில் சைபர் மோசடிகளில் ஈடுபடுத்துவதற்காக தமிழகத்திலிருந்து கம்போடியாவுக்கு ஆட்களை கடத்த முயன்ற 4 பேர் கும்பலை, சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
வெளிநாட்டு வேலை என்ற பெயரில் ஏழைகளை குறி வைத்து, அவர்களுக்கு அதிக சம்பளம் தருவதாக ஆசைவார்த்தை கூறி வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு தெரியாமலே அவர்களை அக்கும்பல் கம்போடியாவில் உள்ள சைபர் மோசடி கும்பலிடம் விற்பனை செய்ய முயல்வதாக, தமிழக சைபர் க்ரைம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
குறிப்பாக, மதுரை, மேலூரைச் சேர்ந்த சிலரை வெளிநாட்டில், ‘டேட்டா என்ட்ரி’ வேலை என்ற பெயரில் சில முகவர்கள் அணுகி உள்ளனர். அதிக சம்பளம், எளிதான வேலை, இலவச தங்கும் இடம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்தவர்களுக்கு தட்டச்சு சோதனை வீடியோ நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை போன்றவற்றை போலியாக நடத்தியுள்ளனர்.
இதில் தேர்வானவர்களை கம்போடியாவுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. இதை அறிந்த மாநில சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி அனிஷா ஹூசைன், இந்த கும்பலை கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, அப்பிரிவு எஸ்.பி. ஷஹ்னாஸ் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரித்தனர்.
இதில், மோசடி கும்பல் மதுரையைச் சேர்ந்தவர்களை சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கு கம்போடியா நாட்டு சைபர் மோசடி கும்பலிடம் விற்பனை செய்ய திட்டமிட்டது தெரிந்தது.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் கண்காணித்து 3 முகவர்கள் மற்றும் 1 வழிகாட்டி என 4 பேரை கைது செய்தனர். மேலும், சைபர் மோசடி கும்பலுக்கு விற்பனை செய்யப்பட இருந்தவர்களை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
சைபர் மோசடி கும்பலிடம் விற்பனை செய்யப்படுபவர்கள் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபடகட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மறுப்பவர்கள் அல்லது இலக்கை சாதிக்காதவர்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள்.
எனவே, வெளிநாட்டு வேலை பெறுவதற்கு முன்னர் நம்பகத் தன்மை குறித்து தெரிந்து கொண்டு செயல்படுங்கள் என சைபர் க்ரைம் போலீஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.