

சென்னை: ஊரகப் பகுதிகளில் வாழும் 30 ஆயிரம் தகுதி வாய்ந்த மகளிருக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மானியத்தில் 5 ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 2026– 27-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், கிராமப்புற மேம்பாடு, ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வேளாண் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக கால்நடை பராமரிப்புத் துறை விளங்குகிறது.
நடப்பு நிதியாண்டில், ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும். இதன்மூலம், சுமார் 30 ஆயிரம் தகுதி உள்ள நபர்கள் பயனடைவார்கள் என்று நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.
அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், 2026– 27-ம் நிதி ஆண்டுக்கு ரூ.109.75 கோடிக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கால்நடை சொத்துகள் வழங்கப்படுவதால் அவர்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைவதோடு, கிராமப்புற பொருளாதாரமும் சிறக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.