

சென்னை: கீழ்ப்பாக்கம் முருகன் மருத்துவமனை அருகே நேற்று முன்தினம் இரவு 2 சிறுமிகள் சுற்றித் திரிந்தனர்.
அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கீழ்ப்பாக்கம் காவல் நிலைய காவலர் வசந்த், அவர்களிடம் விசாரித்தார். இருவரும் வேலூர் மாவட்டத்தில் இருந்து தனியாக ரயில் மூலம் சென்னை வந்தது தெரியவந்தது. இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, பெண் காவலர்கள் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பதிலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவிகள்.
தாய் திட்டியதால் வருத்தமடைந்த மாணவி, தனது தோழியுடன் வீட்டைவிட்டு வெளியேறி சென்னை வந்தது தெரிந்தது. இதற்கிடையே பெற்றோர் அளித்த புகாரின்பேரில், சிறுமிகளை வேலூர் போலீஸார் தேடி வந்தனர். சென்னையில் சிறுமிகள் இருப்பதை அறிந்து இங்கு வந்த அவர்கள், சிறுமிகளை அழைத்துச் சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.