பழநி முருகன் கோயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா தரிசனம், ரோப் கார் சேவை!

பழநி முருகன் கோயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா தரிசனம், ரோப் கார் சேவை!
Updated on
2 min read

திண்டுக்கல்: பழநி முருகன் கோயிலுக்கு வரும் மாற்றுத் திறனாளிகளை சுவாமி தரிசனம், ரோப் கார் மற்றும் வின்ச் ரயிலில் கட்டணமில்லாமல் அனுமதிக்கும் திட்டத்தை அறநிலையத் துறை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அர.சக்கரபாணி ஆகியோர் இன்று (டிச.8) தொடங்கி வைத்தனர்.

பழநி மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அர.சக்கரபாணி ஆகியோர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, 2025-26-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பேரவை அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில், பழநி முருகன் கோயிலுக்கு வரும் மாற்றுத் திறனாளிகளை சுவாமி தரிசனம், ரோப் கார் மற்றும் வின்ச் ரயிலில் கட்டணமில்லாமல் அனுமதிக்கும் திட்டத்தை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அர.சக்கரபாணி தொடங்கி வைத்தனர்.

பின்னர், மலைக் கோயிலில் உபயதாரர் மூலம் ரூ.4 கோடி செலவில் உற்சவர் சந்நிதியில் வெள்ளித்தகடு பணி, ராஜகோபுரம், மூலவர் விமானங்களை மின் ஒளிருட்டும் பணிகளை தொடங்கி வைத்தனர்.

முன்னதாக, பழனியாண்டவர் மகளிர் கலை கல்லூரியில் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம், கல்வி உபகரணங்கள் மற்றும் விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3 வேளையும் கட்டணமில்லா உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியை புறக்கணித்த எம்எல்ஏ: இந்நிகழ்ச்சியில், பழநி எம்எல்ஏ செந்தில்குமார், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த செந்தில்குமார் எம்எல்ஏ, ‘பழநி கிரிவலப்பாதையில் வணிகம் செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையால் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐயப்ப சீசன் என்பதால் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கிரிவலப்பாதையை ஒட்டியுள்ள சாலையில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று இணை ஆணையர் மாரிமுத்துவிடம் கூறினார். அதற்கு, இணை ஆணையர், ‘நீதிமன்ற உத்தரவு காரணமாக பக்தர்களுக்கு இடையூறாக வணிகம் செய்ய அனுமதிக்க முடியாது’ என்றார்.

அப்போது, எம்எல்ஏ.வுக்கும், இணை ஆணையருக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்திரத்தில் பழநி மலைக்கோயில், கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயில் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் எம்எல்ஏ புறக்கணித்தார்.

அறுபடை வீடு ஆன்மிகப் பயணத் திட்டத்தில் பழநி முருகன் கோயிலுக்கு வந்த மூத்த குடிமக்கள் 200 பேரை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வரவேற்றார்.

கொடைக்கானலில் நாள் முழுவதும் அன்னதானம்: கொடைக்கானலில் உள்ள குறிஞ்சியாண்டவர் கோயில் 1936-ம் ஆண்டு ஆங்கிலயேர் ஒருவரால் கட்டப்பட்டது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள், வெளிநாட்டினர் அதிகளவில் வருகின்றனர்.

அதனால் கோயில் நடை தினமும் காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 7.30 மணி வரை நடை சாத்தப்படாமல் திறந்தே இருக்கும். நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், இரவு 7.30 மணிக்கு சாயரட்ஜை பூஜையும் நடைபெறும். கடந்த 2002 செப்.15-ம் தேதி முதல் தினமும் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 2025-26-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறையின் மானிய கோரிக்கை அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் மற்றும் அன்னதானத்துடன் வடை, பாயாசம் வழங்கும் திட்டத்தை, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (டிச.8) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, கண்காணிப்பாளர் சொர்ணம், கொடைக்கானல் வட்டாட்சியர் பாபு மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் ரூ.1.85 கோடியில் 3 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்தின் கட்டுமானம் மற்றும் கோயில் திருப்பணிகளை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

பழநி முருகன் கோயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா தரிசனம், ரோப் கார் சேவை!
“ஒரு முன்மாதிரி நடவடிக்கையாக இருக்கும்” - இண்டிகோ விவகாரத்தில் மத்திய அரசு உறுதி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in