

திருச்சி விமான நிலையம் எதிரே புதுக்கோட்டை சாலையில் தனது தாயார் இருந்த காரை அனுமதிக்க கோரி போலீஸாரிடம் கெஞ்சிய மருத்துவர் சுபாஷ் சங்கரி.
திருச்சி: முதல்வர் திருச்சி வருகை காரணமாக விமான நிலையம் முன்பு இரும்பு தடுப்புகள் அமைத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அப்போது இதய நோயாளியான தாயை காரில் அழைத்து வந்த பெண் மருத்துவர், போலீஸாரிடம் தடுப்புகளை அகற்றி. காரை அனுமதிக்கக் கோரி கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவராக பணியாற்றி வருபவர் சுபாஷ் சங்கரி. இவரது தாயார் நளாயினிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இதயக் கோளாறு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக, அவரை சுபாஷ் சங்கரி தனது காரில் அழைத்துக்கொண்டு நேற்று ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், திருச்சியில் நேற்று நடைபெற்ற வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைக்க தனி விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் காலை 9 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தார். முதல்வர் வருகையையொட்டி காலை 8.45 மணி அளவில், பிற வாகனங்கள் வருவதைதடுக்க, திருச்சி விமான நிலையம் முன்பகுதியில் புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீஸார் இரும்பு தடுப்புகளை அமைத்துவிட்டனர்.
இதனால், நோயாளி தாயாரை அழைத்துவந்த சுபாஷ் சங்கரியின் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது. காரில் இருந்த தாயாரின் மூச்சுத் திணறல் அவருக்கு மேலும் கவலையை ஏற்படுத்தியது. அப்போது, முதல்வர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்று திருச்சி மாநகர பகுதிக்கு சென்று விட்டார். ஆனாலும், சாலையில் இருந்த தடுப்புகளை அகற்றி வாகனங்களை அனுமதிக்க போலீஸார் மறுத்துவிட்டனர்.
இதனால், தடுப்புகளை அகற்றி தனது காரை விமான நிலையத்துக்குள் அனுமதியுங்கள். இனியும் தாமதித்தால் விமானம் புறப்பட்டு சென்றுவிடும். எனது தாயாரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடும் என கூறி, போக்குவரத்து போலீஸாரிடம் சுபாஷ் சங்கரி கண்ணீர்விட்டு கதறினார். தாயாரை காப்பாற்றும் முயற்சியில் கண்ணீரோடு துடித்த ஒரு மகளின் போராட்டத்தை அங்கிருந்தவர்கள் செய்வதறியாது வேடிக்கை பார்த்தனர்.
அதன்பிறகு, ஒருவழியாக காலை 10 மணிக்கு சாலை தடுப்புகளை அகற்றி வாகன போக்குவரத்துக்கு போலீஸார் அனுமதித்தனர். அப்போது வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டிருந்த தனது காரை விமான நிலையத்துக்குள் கொண்டுசெல்ல சுபாஷ் சங்கரி கண்ணீருடன் சாலையில் அங்குமிங்கும் பதற்றத்துடன் ஓடிக்கொண்டே வாகன நெரிசலை சரிசெய்தார். பின்னர், திருச்சி விமான நிலைய அதிகாரிகளிடம் தனது நிலையை எடுத்துக்கூறி, தனது தாயாரை விமான நிலையத்துக்குள் அழைத்துச் சென்றார்.