

முதுமலை வனப்பகுதியில் குட்டையில் தாகம் தணித்த யானைகள்.
முதுமலை: நீலகிரி மாவட்டம் முதுமலையில் உறை பனியால் வனப்பகுதிகளில் வறட்சி தலைதூக்கி வருவதால், வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம்பெயர்ந்து வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் இறுதியில் இருந்து பனி காலம் தொடங்கும். இந்தாண்டு தாமதமாக கடந்த மாத இறுதியில் தான் பனிப்பொழிவு தொடங்கியது.
காலை நேர வெப்பநிலை 22 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்ப நிலை 3 டிகிரி செல்சியசாக குறைந்தது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், மசினகுடி, முதுமலை ஆகிய பகுதிகளில் பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தாவரங்கள் மற்றும் புற்கள் காய்ந்து வருவதால், உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன.
வரும் நாட்களில் பனிப்பொழிவு அதிகரித்து காப்பகத்தில் வறட்சி மேலோங்கி வனத்தீ ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், தற்போது காணப்படும் சில விலங்குகளும் இடம்பெயர்ந்து விடும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: உறைபனியால் வனப்பகுதிகளில் புற்கள், தாவரங்கள் காய்ந்துள்ளன. வறட்சி நிலவுவதால் வனத்தீ ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, 688 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட காப்பகத்தில் வனத்தீ ஏற்படாமல் இருக்க 610 கி.மீ., தூரத்துக்கு தீத்தடுப்புக் கோடுகளை வெட்டும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை 67 தெப்பக்காடு வழியாக செல்வதால் சாலையின் இருபுறமும் 10 மீட்டர் அளவில் தீத்தடுப்புக் கோடுகள் வெட்டப்பட்டு வருகின்றன. வனப்பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஒருவேளை வனத்தில் தீப்பிடித்தால் உடனடியாக அணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம், என்றனர்.