சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி: ரூ.3 லட்சம் மாத ஊதியத்தை வேண்டாம் என மறுத்த ஓய்வு நீதிபதி

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி: ரூ.3 லட்சம் மாத ஊதியத்தை வேண்டாம் என மறுத்த ஓய்வு நீதிபதி
Updated on
1 min read

சென்னை: சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளைக் கண்காணிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன், மாதம் ரூ.3 லட்சம் வீதம் தனக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை வேண்டாம் என மறுத்துள்ளார்.

அந்த தொகையை சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு, தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டிருந்தது.

இந்த பணிகளைக் கண்காணிக்க உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகளான ஏ.செல்வம் மற்றும் வி.பாரதிதாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த பணிகளுக்காக நீதிபதிகளுக்கு தலா ரூ.3 லட்சம் மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி வி.பாரதிதாசன், சுற்றுச்சூழல் துறைச் செயலர் காகர்லா உஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை கண்காணிப்பதற்காக, தமிழக அரசு சார்பில் தனக்கு மாதந்தோறும் அளிக்கப்படும் ரூ.3 லட்சம் மதிப்பூதியத்தைப் பெற விரும்பவில்லை.

அந்த தொகையை தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். முன்னதாக, சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளுக்கு மாவட்ட கனிம நிதியில் இருந்து ரூ.5 கோடியை 2 வாரங்களில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி: ரூ.3 லட்சம் மாத ஊதியத்தை வேண்டாம் என மறுத்த ஓய்வு நீதிபதி
சென்னை கோட்டத்தில் 118 ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலி வசதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in