

சென்னை: சென்னை கோட்டத்தில் 118 ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளால், நடைமேடை எண் 11ஏ-வைத் தவிர, பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்திலிருந்து நடைமேடைகளுக்கு செல்வதற்கான சக்கர நாற்காலி சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக, காந்தி இர்வின் சாலை பக்கத்திலிருந்து அனைத்து நடைமேடைகளுக்கும் சக்கர நாற்காலி மூலம் செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது. புதிய நடைமேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும் வரை இந்த வசதி தற்காலிகமாக செயல்பாட்டில் இருக்கும்.
சக்கர நாற்காலி உதவி தேவைப்படும் மூத்த குடிமக்களின் வசதிக்காக, சுமை தூக்குபவர்களின் சேவை மற்றும் அவர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்கள் குறித்த தகவல்களும் நிலைய வளாகத்தில் பொருத்தமான இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உதவி தேவைப்படும் பயணிகள் நிலைய மேலாளர், நிலைய அதிகாரியை அணுகி இந்த வசதியைப் பெறலாம்.
எழும்பூர் ரயில் நிலையத்தின் காந்தி இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை பக்கங்களை இணைக்கும் பிரம்மாண்டமான 18 மீட்டர் அகல நடைமேம்பாலம் கட்டும் பணி முன்னுரிமை அடிப்படையில் நடைபெறுகிறது.
இந்த மேம்பாலத்தில் 6 நகரும் படிக்கட்டுகள் மற்றும் 5 மின்தூக்கிகள் அமைக்கப்பட்டு, அனைத்து நடைமேடைகளுக்கும் செல்ல வழிவகை செய்யப்படும். இப்பணி நடப்பாண்டின் இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் நிலைய வளாகத்தில் பல்வேறு இடங்களில் 13 சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னை கோட்டத்தில் உள்ள 118 ரயில் நிலையங்களில் உதவி தேவைப்படும் பயணிகளுக்காக சக்கர நாற்காலி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல், கடற்கரை, மாம்பலம், பரங்கிமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய பல சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.