

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா நேற்றுடன் பணிஓய்வு பெற்ற நிலையில், பிரிவுபச்சார விழா நடைபெற்றது. இதில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள், நீதித்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் சங்கத்தினர், பார் கவுன்சில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். | படம்: ம.பிரபு |
சென்னை: ‘இளம் வழக்கறிஞர்களுக்காக சென்னையில் நிரந்தர வழக்கறிஞர்கள் பயிற்சியகம் அமைக்க வேண்டும்’ என ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த எம்.எம். ஸ்ரீவஸ்தவா, கடந்தாண்டு ஜூலை 21-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தின் 54-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் அவர் நேற்றுடன் பணி ஓய்வுபெற்ற நிலையில், அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் பிரிவுபச்சார விழா உயர் நீதிமன்ற கலையரங்கில் மாலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘‘சரியான நோக்கத்துடன் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை கண்டறிந்து அவற்றை விசாரணைக்கு எடுத்து, தகுந்த உத்தரவுகளை பிறப்பித்ததன் மூலம் வழக்கு தொடர்ந்தவர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை தலைமை நீதிபதி பூர்த்தி செய்துள்ளார்.
அதேபோல உள் நோக்கத்துடன் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவற்றை அபராதத்துடன் தள்ளுபடி செய்தவர் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா.வழக்கறிஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக தனது நீதிபரிபாலன பணியை வெகு சிறப்பாக நிறைவு செய்துள்ளார்’’ என பாராட்டினார்.
பின்னர் ஏற்புரையாற்றிய தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, ‘‘இந்திய நீதித்துறை வரலாற்றில் 150 ஆண்டுகள் பழமையான, பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்தது பெருமையளிக்கிறது.
மற்ற உயர் நீதிமன்றங்களைக் காட்டிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில்தான் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் உள்ளனர். அவர்களும் நீதித்துறைக்காக குறிப்பிடத்தக்க அளவில் பணியாற்றி வரு கின்றனர்.
இளம் வழக்கறிஞர்களுக்காக சென்னையில் நிரந்தர வழக்கறிஞர்கள் பயிற்சியகம் அமைக்க வேண்டும். எனது நீதிபரிபாலன பணி சிறக்க எனக்கு உறுதுணையாக இருந்த எனது மனைவி மற்றும் மகள்களின் அர்ப்பணிப்பும் அளப்பெரியது’’ என நெகிழ்ச்சி யுடன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள், நீதித்துறை அதிகாரிகள், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் நிர்வாகிகள், நீதித் துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.