கோயில்களில் திரைப் பிரபலங்கள், விஐபி தரிசனத்துக்கு கட்டுப்பாடு: அறநிலையத் துறை நடவடிக்கை

இந்து சமய அறநிலையத் துறை
இந்து சமய அறநிலையத் துறை
Updated on
1 min read

சென்னை: கோயில்களுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வரும்போது, பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க இந்து சமய அறநிலையத் துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அறநிலையத் துறை ஆணையர் டி.ஜி. வினய், அனைத்துச் செயல் அலுவலர்களும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்: திரைத் துறை உள்ளிட்ட கலைத் துறை பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் (விஐபி) கோயிலுக்குத் தரிசனம் செய்ய வருவது தெரிந்தால் குறைந்தது ஒரு நாளைக்கு முன்பே அது குறித்து ஆணையர் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

அவர்களின் வருகை நேரம் மற்றும் அவர்களுடன் எத்தனை பேர் வருகிறார்கள் என்ற முழு விவரத்தையும் கட்டாயம் அளிக்க வேண்டும். விஐபி-க்கள் வருகையின் போது, கோயில் வளாகத்துக்குள் புகைப்படம் எடுப்பதற்கும், வீடியோ பதிவு செய்வதற்கும் எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது.

பிரபலங்களின் வருகையால் பொது பக்தர்களின் தரிசனத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது. அவர்களின் நுழைவு மற்றும் நடமாட்டத்தை முறைப்படி ஒழுங்குபடுத்த வேண்டும்.

கோயிலின் புனிதத் தன்மை, மரபு மற்றும் ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும். முன்கூட்டியே அனுமதி பெற்றவர்கள் அல்லது பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக அவசியமான அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் மட்டுமே விஐபி-க்களுடன் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.

தேவையில்லாத நபர்களைத் தவிர்க்க வேண்டும். இந்த விதிமுறைகளை அனைத்துக் கோயில்களிலும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் எவ்வித விதிவிலக்கும் இன்றி அனைத்துச் செயல் அலுவலர்களும் மிகக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை
கரூர்: குடிநீர் பிரச்சினைக்காக சமூக ஆர்வலர் குடும்பத்துடன் உண்ணாவிரதம் - கிட்டிய உடனடி தீர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in