

கரூர்: கடவூர் வட்டம் மாவத்தூர் ஊராட்சி கோடங்கிபட்டியில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, சமூக ஆர்வலர் ஒருவர் தனது குடும்பத்துடன் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கிய நிலையில், ட்ராக்டர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டதால் ஆறரை மணி நேர உணாவிரதத்தை விலக்கிக் கொண்டார்.
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் மாவத்தூர் ஊராட்சி கோடங்கிபட் டியைச் சேர்ந்தவர் பெ.வாசுதேவன் (47). சமூக சேவகர். இவர் மனைவி சரளாதேவி (39), மகள்கள் தமிழினி (12), யாழினி (10). மகன் வருண்தேவ் (8).
கோடங்கிபட்டியில் குடிநீர் வழங்கக் கோரி வாசுதேவன் பல மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தலைமைச் செயலாளர், ஆட்சியர், எஸ்.பி, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், தரகம்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோருக்கு வாசுதேவன் கடிதம் மூலம் ஆக.3-ஆம் தேதி தகவல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கோடங்கிப்பட்டியில் உள்ள வீட்டில் இன்று (ஆக.8) காலை முதல் 6 மணி முதல் வாசுதேவன், அவர் மனைவி சரளாதேவி, மகள்கள் தமிழினி, யாழினி, மகன் வருண்தேவ் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.
இது குறித்து தகவலறிந்த கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் வாசுதேவனிடம் ட்ராக்டர் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இருந்தாலும் தண்ணீர் வழங்கப்படாத நிலையில் வாசுதேவன் குடும்பத்துடன் உண்ணாவிரதத்தை தொடர்ந்த நிலையில் மதியம் 12.30 மணி போல ட்ராக்டர் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டதை அடுத்து ஆறரை மணி நேரம் குடும்பத்துடன் இருந்த உண்ணாவிரதத்தை வாசுதேவன் முடித்துக் கொண்டார்.
முன்னதாக, கோடங்கிப்பட்டியில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க கடந்த 2018-19-ஆம் ஆண்டு ஆழ்துளை கிணறு அமைத்து தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு குழாய் அமைக்கப்பட்டது. கடந்த 30 நாட்களுக்கு முன்பு மின் மோட்டார் பழுதானது.
பழுது நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், ஆழ்துளை கிணற்றில் தண்ணீரில்லை என தெரியவந்தது. இதனால் இப்பகுதி மக்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் கொண்டு வரும் நிலை உள்ளது.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், ஆட்சியர், முதல்வர் தனிப்பிரிவு மனு அனுப்பப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்தில் இரு முறை நினைவூட்டல், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு அளிக்கப்பட்டன.
‘குடிநீர் கேட்டு பல மனு அளித்தும் கண்டு கொள்ளாத அரசு, மாவட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஆகியவற்றை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளோம். உயிருக்கு, உடல் நிலைக்கு ஏற்படும் அனைத்து பாதிப்புகளுக்கும் அரசின் மெத்தனப்போக்கும், அலட்சியமும்தான் காரணம். எங்களுக்கு ஏற்படும் அனைத்து இழப்புகளுக்கும் அரசுதான் முழு பொறுப்பேற்பு’ என்று வாசுதேவன் அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.