

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நடப்பு கல்வி ஆண்டில் அரசு சட்டக் கல்லூரிகளில் எல்எல்எம் சேர்க்கைக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தற்போது பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டம் மிகவும் தொடக்க நிலையில்தான் உள்ளது. தற்போது வரை இத்திட்டம் தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.
திட்டம் இன்னும் ஆரம்ப நிலையில் இருக்கும்போதே திமுக நீதிமன்றத்தை நாடுவது ஏன் என்று தெரியவில்லை. திட்டத்தை தொடக்க நிலையிலேயே முடக்குவதற்கான அவசரம் ஏன்?. மக்கள் மற்றும் மீனவர்களுக்கு எதிராக அரசு செயல்படாது என்பது ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அமைச்சர் இதுதொடர்பாக வெளிப்படையான விளக்கத்தை அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் உரிய பதில் மனு தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஜெம் வீரமணி விவகாரம்
தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து, அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான குற்றச்சாட்டுகள் பற்றி திமுகவின் முன்னாள் ரகுபதி பேட்டி அளித்தபோது அதிகப்படியான எதிர்வினை காட்டினார்.
ஜெம் வீரமணி விஷயத்தில் திமுக ஏன் இப்படி அளவுக்கு மீறி எதிர்வினையாற்றுகிறது? ஏதோ பெரிய தவறை மறைப்பதற்குதான் இதை செய்கின்றனர். இதுவரை முன்னாள் அமைச்சர்கள் 7 செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளனர்.
ரகுபதி தனது பேட்டியில், வீரமணி சம்பந்தப்பட்ட வீடியோ தெளிவில்லாமல் இருந்ததாகவும், அதுபோதுமான ஆதாரம் இல்லை என்பதால் ஆதாரம் வந்த பிறகு விசாரணையை தொடர்கிறோம் என்று அப்போது கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவை அவர் பார்த்தாரா? அல்லது பார்த்தவர்கள் யாரும் அவரிடம் கூறினார்களா? அதற்கு ரகுபதி பதில் சொல்ல வேண்டும். இதற்கு பெயர்தான் வழக்கை மூடும் செயல். அவர்கள் விசாரணையை தொடர்ந்து நடத்தி இருக்க வேண்டும்.
இந்த ஆட்சியில்தான் முறையான விசாரணை நடைபெறுகிறது. தலைமறைவாக இருந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வழக்கு முதல்வர் விஜய்யின் தனி கவனத்தில் உள்ளது.
எந்த குற்றவாளியும் தப்பிச் செல்ல வாய்ப்பில்லை. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க முடியாது. ஜெம் வீரமணியை யார் காப்பாற்ற நினைத்திருந்தாலும், அவர்களையும் முதல்வர் தப்பிக்க அனுமதிக்கமாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.