

சென்னை: சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் ரூ.8 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று திறந்து வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு தேசிய, பன்னாட்டு தரத்துக்கு இணையான பயிற்சி வசதிகள் கிடைக்கும் வகையிலும், விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் நோக்கிலும் கடந்த 3 மாதங்களில் சென்னை, அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, விருதுநகர், விழுப்புரம், கடலூர், தருமபுரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தடகள எறிதல் மையம், செயற்கையிழை ஹாக்கி மைதானங்கள், பாரா விளையாட்டரங்கங்கள், முதல்வர் விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளம் ஆகியவை ரூ. 31 கோடி மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
தடகள ஓடுதளங்கள்
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, நீலகிரி, ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் செயற்கை இழை தடகள ஓடுதளங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. ராமநாதபுரம், சேலம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் ரூ.38.24 கோடி மதிப்பில் புதிய செயற்கை இழை தடகள ஓடுதளங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கம், ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில் ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று திறந்து வைத்தார்.