

கிருஷ்ணகிரியில் அகில இந்திய கட்டுநர்கள் சங்கத்தின், முன்னாள் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன், தமிழகம், புதுகை மற்றும் அந்தமான் மாநிலத் தலைவர் என். ராமலிங்கம் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினார்.
கிருஷ்ணகிரி: தமிழகம் முழுவதும் ஒப்பந்ததாரர்களுக்கு அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.4,000 கோடியை விடுவிக்க வேண்டும் என கட்டுநர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகில இந்திய கட்டுநர்கள் சங்கத்தின், தமிழக அளவிலான 57-வது புதிய மையம் தொடக்கவிழா கிருஷ்ணகிரியில் நடந்தது. இவ்விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அகில இந்தியத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன், தமிழகம், புதுவை மற்றும் அந்தமான் மாநிலத் தலைவர் என். ராமலிங்கம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சியில் கட்டுமானத் துறையின் பங்களிப்பு சுமார் 70 சதவீதமாக உள்ளது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாகவும் கட்டுமானத் துறை விளங்குகிறது.
ஆனால், தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, எவ்வித காரணமுமின்றிப் பழைய ஒப்பந்தங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. புதிய பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளும் (டெண்டர்) கோரப்படாததால், கட்டுமானப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் மைனஸ் 11 சதவீதம் வரை சரிந்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஒப்பந்ததாரர்களுக்கு அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் ரூ.4,000 கோடி ஆகும். இதில், சென்னை மாநகராட்சியில் மட்டும் ரூ.2,200 கோடி நிலுவையில் இருந்த நிலையில், எங்களது போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து முதற்கட்டமாக ரூ.500 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மீதம் நிலுவையில் உள்ள முழுத் தொகையையும் தாமதமின்றி விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கட்டுமானத் தொழில் மற்றும் அதனை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், நிறுத்தி வைக்கப்பட்ட அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களை உடனடியாகத் தொடங்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை நேரில் வலியுறுத்த முதல்வரின் சந்திப்புக்காகத் தொடர்ந்து கடிதங்கள் மூலம் அனுமதி கோரி வருகிறோம். இதுவரை எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை” என்றனர்.
இந்நிகழ்வின் போது, சங்கத்தின் தென்னகம்-2 துணைத் தலைவர் பிரகாஷ், காப்பாளர்கள் முத்துக்குமார், வெங்கடேசன், முன்னாள் அகில இந்தியத் தலைவர் மோகன், கிருஷ்ணகிரி மையத்தின் தலைவர் ஆறுமுகம், துணை தலைவர் தமிழ்மணி லட்சுமணன், செயலாளர் சிவபிரகாசம், துணை செயலாளர் பரணிதரன் ஆகியோர் உடனிருந்தனர்.