

சென்னை: சுகாதாரத்துறை செயலர் தாரேஸ் அகமது நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதல்வர் விஜய் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் நிபந்தனைகளை தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது. புதிய வழிகாட்டுதலின்படி, தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் தாய் தமிழகத்தில் பிறந்து, திருமணமாகி வெளிமாநிலம் சென்றிருந்தாலும், அத்தாயின் தாய்- தந்தையர் இருவரும் தமிழகத்தில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருந்து, அதற்குரிய ஆவண ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், அவரது குழந்தைக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும்.
அதன்படி, காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவித்த உமா மகேஸ்வரி என்ற பெண்ணின் குழந்தைக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம், அக்டோபர் 7-ம் தேதி (நேற்று) வட்டார மருத்துவ அலுவலரால் வழங்கப்பட்டது. இந்த திருத்தம், கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பொருந்தும்.