

சென்னை: தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளை கடைப்பிடித்தால் மட்டுமே முடி மாற்று சிகிச்சை மையங்களுக்கு பதிவு உரிமம் வழங்கப்படும்என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திருத்த சட்டத்தின்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மட்டுமின்றி, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி மருத்துவமனைகளும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் செயல்படும் முடிமாற்று சிகிச்சை மையங்களை முறைப்படுத்துவதிலும், கண்காணிப்பதிலும், பதிவு செய்வதில் சில சிக்கல்கள் இருப்பது தெரியவந்தது. அழகு நிலையங்கள், சருமப் பொலிவு மையங்கள் என்ற பெயரில் அவை செயல்படுவதால் சுகாதாரத் துறையின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் வராததால், அதுபோன்ற மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ அதிகாரிகளால் முடிவதில்லை.
இதையடுத்து புதிய நடைமுறைகளுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளை கடைப்பிடித்தால் மட்டுமே முடி மாற்று சிகிச்சை மையங்களுக்கு பதிவு உரிமம் வழங்கப்படும்.
மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த அங்கீரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். முன்னதாக சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நபரின் ஒப்புதலை அவசியம் பெறவேண்டும். சுகாதாரத்துறையால் கண்காணிப்புக்கும், ஆய்வுக்கும் உட்படுத்தப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ தகுதிகள் இல்லாமல் விதிகளுக்கு புறம்பாக சிகிச்சைகள் வழங்குவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர் மற்றும் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.