

மதுரை: அதிமுகவை ஏன் தொட்டோம் என முதல்வர் விஜய் கதறும் நாள் விரைவில் வரும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.
அவர் இன்று மதுரையில் கூறியது: “தாராபுரத்தில் முதல்வர் விஜய்யின் பிரச்சாரத்தில், அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டு தவெகவில் தஞ்சம் புகுந்த வேட்பாளர், தொகுதி மக்களை அடிமையாக்க ஒரு நீலிக்கண்ணீர் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
வாய்ப்பளித்த தலைமைக்கு துரோகம் செய்ததை தாராபுரம் தொகுதி வாக்காளர்கள் ஏற்கவில்லை. அதனை திசை திருப்பும் அழுகை நாடகத்தை அரங்கேற்றி, அதற்கு ஆறுதல் கூறுவது போன்று துணைபோன முதல்வர் விஜய் தன்னை நிரபராதியாக காட்டுகிறார்.
அதிமுகவை விமர்சிக்கும் விஜய்யின் நயவஞ்சகத்தை புரிந்து கொள்ளாமல் செல்லும் அதிமுகவினரை நாம் என்னவென்று சொல்வது. அரசியல் காற்று எப்போதும் ஒரே திசையில் வீசாது. தாராபுரம் இடைத்தேர்தல் அதற்கு அச்சாரமாக அமையும்.
விஜய் அவர்களே, அதிமுக ஒன்றும் நீங்கள் நினைத்தால் கரைந்து போகும் உப்பு அல்ல. அதிமுக தமிழக மக்களுக்கு கிடைத்த தங்க புதையல். இதை நீங்கள் நினைத்தாலும் கரைக்க முடியாது. எதிரிகளுக்கு இரும்பு, தொண்டர்களுக்கு தங்கம், பொதுமக்களுக்கு மாணிக்கம், வைரக்கல்லாக பயன்படும் இயக்கம் அதிமுக.
விபத்தால் அதிகாரத்துக்கு வந்த விஜய் அல்ல, அவரது அப்பன் அல்ல, தாத்தா வந்தாலும் கடைசித் தொண்டன் இருக்கும் வரை அதிமுகவிடம் பாச்சா பலிக்காது. ஏன் அதிமுகவை தொட்டோம் என விஜய் கதறும் நாள் வெகுதொலைவில் இல்லை. விரைவில் வரும். தற்போது ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் முதலில் உங்களை விட்டு ஓடுவார்கள்” என்று அவர் கூறினார்.