

மதுரை: மருத்துவ கட்டமைப்புகளையும், மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்காமல் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதால், அன்றாடம் மகப்பேறு சிகிச்சையில் பல்வேறு சவால்களையும், சிரமங்களையும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள், செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.
மகப்பேறு சிகிச்சைப் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப்பிரிவுகளை மேம்படுத்தாமலேயே, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால் தற்போது உள்ள மருத்துவக் கட்டமைப்பு, மருத்துவர்கள், பணியாளர்களை கொண்டு திட்டத்தை செயல்படுத்துவதுடன் மகப்பேறு சிகிச்சையை உரிய முறையில் மேற்கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவத் துறையை சேர்ந்த சில உயர் அதிகாரிகள் கூறியதாவது: தனியார் மருத்துவமனையில் ஒரு குடும்பம் பிரசவத்துக்கு சராசரியாக ரூ.70 ஆயிரம் செலவிடுகிறது.
இந்த செலவினத்தை குறைத்து, இலவசமாக அரசு மருத்துவமனைகளில் பிரசவங்கள் மேற்கொள்வதற்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்துவதாக சுகாதாரத் துறை அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.
ஆனால், ஏற்கெனவே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையை போக்கவும், மகப்பேறு கட்டமைப்பு வசதிகள், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பையும் உறுதிப்படுத்தாமலும் அவசர கோலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது ஏற்புடையது அல்ல என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
தற்போது திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் சராசரியாக 35 முதல் 40 பிரசவங்கள் நடைபெறுகின்றன. தங்க மோதிரம் திட்டத்தால் இந்த எண்ணிக்கை இனி அதிகரிக்கக்கூடும்.
மேலும், இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மோதிரங்களை பாதுகாக்க பெட்டகங்கள், சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, மோதிரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மருத்துவர்கள், அமைச்சு பணியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தங்க மோதிரம் வைக்கப்பட்டுள்ள அட்டையில் க்யூஆர் கோடு மூலம், அது எந்த குழந்தைக்குரியது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். அந்த மோதிரம் குழந்தைக்கு வழங்கப்பட்டவுடன், தாயின் கைரேகை பதிவு செய்யப்படும். இவை அனைத்தும் சிசிடிவி கேமரா முன்பு வைத்து நடைபெற உள்ளது.
மகப்பேறு சிகிச்சைகளை சிறப்பாக மேற்கொண்டு தாய், சேய் பாதுகாப்பை உறுதி செய்வதை தாண்டி, இந்த திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தும் நெருக்கடியும் மருத்துவமனை நிர்வாகத்துக்கும், மருத்துவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு மகப்பேறு சிகிச்சை, தங்க மோதிரம் திட்டத்திலேயே முழுக்கவனத்தையும் மகப்பேறு மருத்துவத் துறை செலுத்தும் நிலை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
அதனால், மாற்று வழியில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிடில், கூடுதல் பணியாளர்களை நியமிப்பது அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.