மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

அபராதம் விதிக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை
 ராமதாஸ் | கோப்புப் படம்

ராமதாஸ் | கோப்புப் படம்

Updated on
2 min read

பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்து, ராமதாஸ் தான் பாமக தலைவர் என அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

ராமதாஸால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தனக்கும், அன்புமணிக்கும் இடையே உள்ள உட்கட்சி பிரச்சினை முடிவுக்கு வரும் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டுமென்றும், அதுவரை மாம்பழம் சின்னத்தையும் முடக்கி வைக்க வேண்டுமெனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, 2025-ம் ஆண்டு மே மாதத்துடன் அன்புமணியின் பதவிக்காலம் முடிந்து விட்ட நிலையில், போலியான ஆவணங்களை தாக்கல் செய்து, 2026-ம் ஆண்டு வரை தனது பதவிக்காலம் இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் கடிதம் அளித்து அங்கீகாரம் பெற்றுள்ளதாக ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள் குற்றம் சாட்டினார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில், அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்பட்ட கட்சியான பாமகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது. மாம்பழம் சின்னத்தை முடக்குவது குறித்தும் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது, என விளக்கமளித்தார்.

அன்புமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், ‘‘ இந்த வழக்கின் மனுவில் வயதான நிலையில் உள்ள ராமதாஸ் போட்டுள்ள கையெழுத்து பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’’ என்றார்.

அதற்கு ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் அருள், ‘‘ராமதாஸ் ஆரோக்கியமாக நடைபயிற்சியுடன், நீச்சல் பயிற்சியும் மேற்கொள்கிறார். அவர்கள் தேவையில்லாத கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகின்றனர்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘இதே விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு உயர் நீதிமன்றத்திலும் எதற்காக வழக்கு தொடர்ந்துள்ளீர்கள். உட்கட்சி பிரச்சினை தீரும் வரை தேர்தலை தள்ளி வைக்க முடியுமா.

உங்கள் பிரச்னைக்கு நீங்கள் சிவில் நீதிமன்றத்தை அணுகித்தான் பரிகாரம் தேட முடியும். அதன்பிறகே தேர்தல் ஆணையத்தை நாட முடியும். இதுபோல மனுக்களைத் தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் அபராதம் விதிக்க நேரிடும்’’ என எச்சரித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பாமக அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு கூறுகையில், ‘‘ ராமதாஸின் கையெழுத்தை போலியாக போட்டு யார் வழக்கைத் தொடர்ந்துள்ளார்கள். அதற்கு எந்த வழக்கறிஞர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பதை அறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம், என்றார். அதேபோல பாமக ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் அருள் கூறுகையில், ‘‘ உயர் நீதிமன்றம் இதுதொடர்பாக சிவில் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டு வழக்குகளை முடித்து வைத்துள்ளது. இதில் வெற்றி, தோல்வி யாருக்கும் கிடையாது. ஒருதரப்புக்கு சாதகமாக செயல்படும் தேர்தல் ஆணையத்தை நாங்கள் இந்த வழக்கின் மூலமாக தட்டி எழுப்பியுள்ளோம்’’ என்றார்.

தந்தை சொல்லை மகன் கேட்பதில்லையா? - ராமதாஸ் தரப்பில் வழக்கறிஞர், ‘‘கட்சியின் தலைவராக ராமதாஸை அறிவிக்க வேண்டுமெனக்கோரி உரிமையியல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்து வருகிறது. பாமக-வை அன்புமணி அபகரித்துள்ளார். அவரை மத்திய அமைச்சராக்கியதே ராமதாஸ்தான்’’ என்றார். குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘‘தந்தை சொல்வதை மகன் கேட்பதில்லையா?’’ என்றார். அதற்கு ராமதாஸ் தரப்பில், ஆம் என பதிலளிக்கப்பட்டது.

<div class="paragraphs"><p> ராமதாஸ் | கோப்புப் படம்</p></div>
அமைச்சர் நேரு மீது உடனே வழக்கு பதிவு: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in