

சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகத் துறையில் பணிநியமனத்துக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் உடனடியாக வழக்கு பதிவுசெய்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் முறைகேடாக டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், நகரமைப்பு அலுவலர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டு, பணி நியமனம் நடந்துள்ளதாகவும் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடந்த 2025 அக்.27-ம் தேதி கடிதம் அனுப்பியது.
அதில், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்களான ரவிச்சந்திரன், மணிவண்ணனுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.
நேரு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை மொத்தம் 3 முறை கடிதம் அனுப்பியது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர். இதை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று அமைச்சர் நேரு தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு: அமலாக்கத் துறை அனுப்பியகடிதத்தின் அடிப்படையில் அமைச்சர் நேரு, அவரது சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் உள்ளிட்டோர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் மற்றும் அதிமுக எம்.பி. இன்பதுரை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு விசாரணை ஏற்கெனவே நடந்தது. அப்போது நடைபெற்ற வாதத்தின் விவரம்:
அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்: அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணை நடந்து வருகிறது. அந்த கடிதம் அடிப்படையில் மட்டுமே நேரடியாக யார் மீதும் வழக்கு பதிவு செய்ய முடியாது. இந்த வழக்கை தொடர்ந்துள்ள ஆதிநாராயணன் மீது 6 கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மற்றொரு மனுதாரரான அதிமுக எம்.பி. இன்பதுரை, தேர்தல் நேரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ்: இந்த விவகாரத்தில் டிஜிபிக்கு வெறும் கடிதம் மட்டுமின்றி, அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் டிஜிட்டல் ஆவணங்களை அனுப்பி அமலாக்கத் துறை தனது கடமையை முறையாக செய்துள்ளது. அந்த ஆதாரங்களின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணையே நடத்தாமல், சம்பந்தப்பட்டவர்கள் மீது நேரடியாகவே வழக்கு பதிவு செய்ய முடியும். ஆனால், தமிழக போலீஸார் தங்களது கடமையை செய்யவில்லை.
டிஜிபி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி: வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்களின் நோக்கம் மற்றும் நம்பகத்தன்மையை ஆராய வேண்டிஉள்ளது. வங்கி நிதி மோசடி தொடர்பான சோதனையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. அந்த நிதி மோசடி வழக்கு ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுவிட்டது.
அதிமுக எம்.பி. இன்பதுரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி: நகராட்சி நிர்வாகத் துறையில் நடந்துள்ள இந்த மிகப்பெரிய மோசடியை அமலாக்கத் துறை வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டிய போலீஸார் ஆரம்பகட்ட விசாரணை என்ற பெயரில் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகின்றனர். இவ்வாறு வாதம் நடந்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று விரிவான உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: ஆதாரப்பூர்வமாக குற்றச்சாட்டுதமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் நடந்துள்ள இந்த முறைகேடு மூலமாக பல நூறு கோடி ரூபாய் லஞ்சப்பணம் ஹவாலா முறையில் கைமாறியுள்ளதாக அமலாக்கத் துறை ஆதாரப்பூர்வமாக குற்றம்சாட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசு உயர் அதிகாரிகள், அமைச்சரின் உறவினர்கள், அரசியல்வாதிகளின் நெருங்கிய நட்பு வட்டாரங்கள், விண்ணப்பதாரர்கள் என கூட்டணி அமைத்து செயல்பட்டுள்ளனர். தேர்வு முடிவு வெளியாகும் முன்பே சம்பந்தப்பட்டவர்களுக்கு அதுகுறித்த விவரம் முறைகேடாக தெரிவிக்கப்பட்டு, பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
2,538 பேரும் பணியில் சேர்ந்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நேர்காணல் கடிதத்துடன் 10 ரூபாய் நோட்டை அடையாளமாகக் கொடுத்து கோடிக்கணக்கில் லஞ்சப் பணம் ஹவாலா முறையில் வசூலிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களை வாட்ஸ்அப் உரையாடல்கள், ஸ்கிரீன் ஷாட்கள் மூலம் அமலாக்கத்துறை நிரூபித்துள்ளது.
முறைகேடு நடந்துள்ளதாக தகவல்களை அனுப்பியது புலனாய்வு அமைப்பான அமலாக்கத் துறை; மூன்றாம் நபர்கள் அல்ல. அவ்வாறு ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பி மூன்றரை மாதங்களுக்கு மேல் ஆகின்றன. ஆனாலும், தமிழக போலீஸார் இன்னும் நடவடிக்கை எடுக்காமல், ஆரம்பகட்ட விசாரணை என்று கூறி வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடிப்பது அதிருப்தி அளிக்கிறது.
எனவே, அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தாமதம் இன்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். விரிவான விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக ஆதிநாராயணன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். இன்பதுரை தொடர்ந்த வழக்கை முடித்து வைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.