திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும், அரசாங்கம் சட்டத்துக்கு உட்பட்டே செயல்படும் என்றும் முதல்வர் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த சுரங்க நிறுவனம் ஒன்று, முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் டி.வீணாவுக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு ரூ.2.78 கோடி அளவுக்கு முறைகேடாக பணப் பரிவர்த்தனை செய்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் அமலாக்கத் துறை, இவ்வழக்கில் பினராயி விஜயன், வீணா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய கேரள டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்த விவகாரம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் வி.டி. சதீசன், “அரசியல் கட்சிகள் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து பணத்தைப் பெறுவது வழக்கமானதே. ஆனால், இது ஒரு மாறுபட்ட வழக்கு. அமலாக்கத் துறை பல வழக்குகளை மாநில உள்துறைக்கு குறிப்புக்காக அனுப்பியுள்ளது.
பெரிய வழக்குகளாக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும். மாநில அரசுக்கு எதிராக சிபிஎம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை எழுப்புகிறது. நாங்கள் சட்ட ரீதியான ஆய்வை மேற்கொண்டு சட்டப்படி செயல்படுவோம்.
பணமோசடி தடுப்புச் சட்ட விவகாரங்கள் தொடர்பாக அமலாக்கத் துறை அணுகியுள்ளது. ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியபோது காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களைத் தாக்கவில்லை. அரசாங்கம் சட்டத்துக்கு உட்பட்டே செயல்படும். மாநில அரசுக்கு மத்திய அரசு அனுப்பும் கடிதத்தை சட்ட ரீதியாக மட்டுமே கையாள முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், கட்சியின் மூத்த தலைவர் பி.ஏ. முகமது ரியாஸ் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களை உருவாக்க முயல்வதாக சிபிஎம் மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் குற்றம் சாட்டி இருந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பினராயி விஜயன் மற்றும் பி.ஏ.முகமது ரியாஸ் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை பொய்யான கதைகளை உருவாக்க முயற்சிக்கிறது. புனையப்பட்ட இந்தக் கதைகள் எதுவும் கேரளாவில் பலனளிக்காது. இவ்விஷயத்தில் மாநில அரசு என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பது எங்களுக்குத் தெரியவில்லை.
ஆனால் காங்கிரஸ் கட்சி தெளிவாக இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. பினராயி விஜயன் ஏன் கைது செய்யப்படவில்லை என்று முன்பு கேள்வி எழுப்பியதே அவர்கள்தான். இப்போது நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், பாஜகவுடன் ஏதேனும் ரகசிய உடன்பாடு மேற்கொள்ளப்படுகிறதா என்பதுதான்.” என்று அவர் தெரிவித்திருந்தார்.
வழக்கு விவரம்: கேரளாவைச் சேர்ந்த சுரங்க நிறுவனமான கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் (சிஎம்ஆர்எல்), ‘ஐ.டி. ஆலோசனை சேவைகள்’ என்ற பெயரில், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் டி.வீணாவுக்குச் சொந்தமான தற்போது செயல்பாட்டில் இல்லாத எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.2.78 கோடி அளவுக்கு முறைகேடான பணப் பரிவர்த்தனைகளைச் செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், விசாரணையின் போதும், சோதனைகளின் போதும் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் டி.வீணா மற்றும் மருமகனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான பி.ஏ.முகமது ரியாஸ் உள்ளிட்டோர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யக்கோரி, கேரள காவல்துறை டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) 66(2)-வது பிரிவின் கீழ், கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறை இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளது.