

ராஜேந்திர பாலாஜி
சிவகாசி: “திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்தார். அதை தெரிந்துதான் அவர்கள் முடிவு எடுப்பார்கள் என எண்ணுகிறேன். முடிவு அவர்களது விருப்பம்” என சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்து நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். டி.டி.வி தினகரன் கூட்டணிக்கு வந்ததன் மூலம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வாக்குகள் முழுமையாக எங்களுக்கு வரும்.
அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்று பழனிசாமி தனித்து ஆட்சி அமைப்பார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே தேமுதிகவை விஜயகாந்த் ஆரம்பித்தார். அதை தெரிந்துதான் அவர்கள் முடிவு எடுப்பார்கள் என எண்ணுகிறேன். முடிவு அவர்களது விருப்பம். கூட்டணிக்கு இன்னும் சிலர் வந்தாலும் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளோம். கூட்டணிக்காக மடிப்பிச்சை எந்தும் அளவுக்கு அதிமுக பலவீனமாக இல்லை.
அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். அதேபோல் திமுகவும் ஆட்சியில் பங்கு கொடுத்து கூட்டணி அமைக்க மாட்டார்கள். இந்த விஷயத்தில் அதிமுக வழியைதான் திமுக பின்பற்றும். எங்களால் தான் வெற்றி என்பவர்கள், இன்னும் 6 மாதங்கள் கழித்து கூட முடிவு எடுக்கலாம். எங்களை மேலும் பலப்படுத்தி கொள்ளவே கூட்டணி. நாங்கள் பலவீனமானவர்கள் அல்ல என்பதை கூட்டணி வைப்பவர்கள் முடிவு செய்துகொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.