சத்தமில்லாமல் சீட் பெற்ற ஜான் பாண்டியன் - இது ராஜபாளையம் ‘உள்ளரசியல்’

ராஜேந்திர பாலாஜி, ஜான் பாண்டியன்

ராஜேந்திர பாலாஜி, ஜான் பாண்டியன்

Updated on
2 min read

ராஜபாளையம்: ராஜபாளையம் தொகுதியில் பாஜக முன்கூட்டியே தேர்தல் பணிகளை தொடங்கிய நிலையில் 2021 தேர்தலை போல் இந்த முறையும் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்படாததால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மக்களவை தேர்தலில் அமைதியாக இருந்து கடைசி நேரத்தில் தென்காசி தொகுதியை பெற்ற ஜான் பாண்டியன், சட்டபேரவை தேர்தலிலும் யாரும் எதிர்பாராதவிதமாக ராஜபாளையம் தொகுதியை பெற்றுள்ளார்.

ராஜபாளையம் தொகுதியில் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக பொறுப்பாளராக நடிகை கவுதமியை பாஜக மேலிடம் அறிவித்தது. உடனடியாக ராஜபாளையத்தில் வீடு எடுத்து குடியேறிய கவுதமி, அங்கேயே தங்கி இருந்து தீவிரமாக பணியாற்றி வந்தார். தேர்தலுக்கு 5 மாதங்களுக்கு முன்பிருந்தே வேட்பாளர் போல தொகுதி முழுவதும் சுற்றி பிரச்சாரம் செய்து வந்தார்.

ஆனால், தொகுதி பங்கீட்டில் ராஜபாளையம் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காமல் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் பாஜக தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி அதிமுக வில் இணைந்த கவுதமி, 2026 தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார்.

அதேபோல் அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ கோபால்சாமி, ராஜபாளையம் தொகுதியை எதிர்பார்த்து கடந்த 6 மாதங்களாக தேர்தல் பணியாற்றி வந்தார். பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றதும், கோபால்சாமி மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதனால் சீட் கிடைக்கும் என உறுதியாக நம்பி இருந்தார் கோபால்சாமி. ஆனால் திடீர் திருப்பமாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ராஜபாளையத்தில் அக்கட்சி தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியும், ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் இடம்பெற்று இருந்தன.

அதிமுக, பாஜக கூட்டணி பிரிந்தபோது இரு கட்சிகளுமே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து வந்தன. கிருஷ்ணசாமி தான் 6 முறை போட்டியிட்ட தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிட தயாராகி சட்டப்பேரவை தொகுதிவாரியாக கட்சி அலுவலகங்களை திறந்து முன்கூட்டியே பணிகளை தொடங்கினார்.

ஆனால் பாஜகவை சேர்ந்த ஆனந்தன் அய்யாசாமி தென்காசியில் போட்டியிட தயாரானதால் அதிருப்தி அடைந்த கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணிக்கு மாறி, தென்காசியில் சீட் பெற்றார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பாஜக கூட்டணியில் தென்காசி தொகுதியை பெற்ற ஜான் பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார்.

அதேபோல் ராஜபாளையம் தொகுதிக்கு பாஜக, அதிமுக முனைப்பு காட்டி வந்த நிலையில், சத்தமில்லாமல் ஜான் பாண்டியன் ராஜபாளையம் தொகுதியை பெற்று, இரட்டை இலை அல்லது தாமரை எந்த சின்னத்தில் போட்டியிடலாம் என யோசித்து வருகிறார்.

ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்த ராஜேந்திர பாலாஜி:

முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் சாத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டு பல்வேறு பணிகளையும், பொதுச் செயலாளர் பழனிசாமியின் யாத்திரை ஏற்பாடுகளையும் அவரே செய்தார். இவர் சாத்தூர் எம்எல்ஏவாக இருந்தபோது ராஜேந்திர பாலாஜி உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அதேபோல், ராஜபாளையம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கோபால்சாமி அதிமுகவில் ராஜேந்திர பாலாஜி உடன் ஏற்பட்ட மோதலால் பாஜகவில் இணைந்தவர். இருவருக்கும் சீட் கிடைக்கக் கூடாது என தொடக்கம் முதலே காய் நகர்த்தி வந்தார் ராஜேந்திர பாலாஜி.

சாத்தூரை பாஜகவுக்கும், ராஜபாளையத்தை ஜான் பண்டியனுக்கும் ஒதுக்கியதன் மூலம் ஒரே கல்லில் 2 மாங்காய்களை அடித்துள்ளார் ராஜேந்திர பாலாஜி என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

<div class="paragraphs"><p>ராஜேந்திர பாலாஜி,&nbsp;ஜான் பாண்டியன்</p></div>
வென்ற இடங்களில் பின்வாங்கல், வட தமிழகத்தில் ‘நோ’ - பாஜக தொகுதிகள் ‘தெரிவு’ சொல்வது என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in