வென்ற இடங்களில் பின்வாங்கல், வட தமிழகத்தில் ‘நோ’ - பாஜக தொகுதிகள் ‘தெரிவு’ சொல்வது என்ன?

வென்ற இடங்களில் பின்வாங்கல், வட தமிழகத்தில் ‘நோ’ - பாஜக தொகுதிகள் ‘தெரிவு’ சொல்வது என்ன?
Updated on
2 min read

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த முறை வென்ற நெல்லை மற்றும் வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் இம்முறை அக்கட்சி போட்டியிடவில்லை. மேலும், பெரும்பாலான வட மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட பாஜக களமிறங்கவில்லை.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கோவை தெற்கு, மொடக்குறிச்சி, நாகர் கோவில், நெல்லை, அரவக்குறிச்சி, குளச்சல், தாராபுரம், துறைமுகம், காரைக்குடி, மதுரை வடக்கு, ராமநாதபுரம், தளி, திருக்கோவிலூர், திருவையாறு, ஆயிரம் விளக்கு, திருவண்ணாமலை, திட்டக்குடி, உதகமண்டலம், விளவங்கோடு, விருதுநகர் ஆகிய 20 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் நெல்லையில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி, மொடக்குறிச்சியில் சி.சரஸ்வதி, கோவை தெற்கில் வானதி சீனிவாசன் ஆகிய நால்வரும் வெற்றிபெற்றனர்.

இந்தச் சூழலில், 2026 தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் பாஜக, மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவினாசி (தனி), திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர் (தனி), ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை (தனி), ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) ஆகிய தொகுதிகளில் களமிறங்குகிறது.

இவற்றில், பாஜக 2021-ல் போட்டியிட்ட மொடக்குறிச்சி, நாகர்கோவில், குளச்சல், ராமநாதபுரம், தளி, திருவண்ணாமலை, உதகமண்டலம், விளவங்கோடு ஆகிய 7 தொகுதிகளை மட்டுமே மீண்டும் பெற்றுள்ளது.

குறிப்பாக, பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த முறை வென்ற நெல்லை மற்றும் வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் இம்முறை அக்கட்சி போட்டியிடவில்லை.

அதுமட்டுமின்றி அண்ணாமலை போட்டியிட்ட அரவக்குறிச்சி, ஹெச்.ராஜா போட்டியிட்ட காரைக்குடி, எல்.முருகன் போட்டியிட்ட தாராபுரம், குஷ்பு போட்டியிட்ட ஆயிரம் விளக்கு, வினோஜ்.பி.செல்வம் போட்டியிட்ட துறைமுகம் ஆகிய தொகுதிகளில் பாஜக இப்போது களமிறங்கவில்லை.

இதில், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் வேறு தொகுதிகளுக்கு மாறுவார்கள் என சொல்லப்படுகிறது. அதேபோல கரூரை சேர்ந்த அண்ணாமலையும் இப்போது கொங்கு மண்டலத்தில் உள்ள வேறு தொகுதியில் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது.

பாஜக தென் தமிழகம், கொங்கு மண்டலம், சென்னை மண்டல தொகுதிகளில் பலமிக்கதாக பார்க்கப்படுகிறது. ஆனால், இம்முறை கொங்கு மண்டலத்திலும், மொடக்குறிச்சி, உதகமண்டலம், திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, அவினாசி (தனி), ஆகிய 6 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி களமிறங்குகிறது. சென்னையிலும் மயிலாப்பூர் தொகுதியில் மட்டுமே பாஜக போட்டியிடுகிறது.

அதேபோல, மத்திய மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளில் திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை (தனி), அறந்தாங்கி ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 6 மாவட்டங்களில் ஓர் இடத்தில் கூட போட்டியிடவில்லை. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சொந்த மாவட்டமான கரூரிலும் எந்தத் தொகுதியையும் பாஜக கேட்டுப்பெறவில்லை.

முக்கியமாக, வட மண்டலத்தில் உள்ள கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தருமபுரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட பாஜக போட்டியிடவில்லை.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் மட்டுமே பாஜக போட்டியிடுகிறது. அதில் கன்னியாகுமரியில் 4 தொகுதிகள், புதுக்கோட்டையில் 3 தொகுதிகள், சிவகங்கை மற்றும் திருப்பூரில் தலா 2 தொகுதிகளில் பாஜக களமிறங்கிறது.

தமிழகம் முழுவதும் தங்களுக்கு செல்வாக்கு உள்ளதாக பாஜக சொல்லிக்கொண்டாலும், தற்போது பெற்றுள்ள தொகுதிகளின் அடிப்படையில் அந்தக் கட்சி, தென் மாவட்டங்களில்தான் அதிகம் போட்டியிடுகிறது. மற்றபடி, மத்திய மண்டலம், வட மண்டலம், சென்னை மண்டலத்தில் பாஜக மிக சொற்ப என்ணிக்கையில்தான் தொகுதிகளைப் பெற்றுள்ளது. பெரும்பாலும், காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளையே பாஜக தேர்ந்தெடுத்துள்ளது.

கடந்த முறை 20 தொகுதிகளைப் பெற்ற பாஜக வெறும் 4 தொகுதிகளில்தான் வென்றது. அதிலும், மொடக்குறிச்சியில் சரஸ்வதி 281 வாக்குகள் வித்தியாசத்திலும், கோவை தெற்கில் வானதி சீனிவாசன் 1,728 வாக்குகள் வித்தியாசத்திலும் தான் வென்றார்கள்.

எனவே இம்முறை, எப்படியாவது இரட்டை இலக்க வெற்றியைப் பெறவேண்டும் என பாஜக உறுதியாக உள்ளது. அதன் அடிப்படையில்தான் பாஜக தொகுதிகளை தேடி தேர்ந்தெடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

வென்ற இடங்களில் பின்வாங்கல், வட தமிழகத்தில் ‘நோ’ - பாஜக தொகுதிகள் ‘தெரிவு’ சொல்வது என்ன?
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை? - முழு பட்டியல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in