

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடலோர கர்நாடகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலின் மீதமுள்ள பகுதிகளிலும், மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளிலும், லட்சத்தீவு பகுதிகளிலும், கேரளா - கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளிலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும், மேலும் தென்மேற்கு, மத்திய மேற்கு, மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் முன்னேறியுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
7-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 102 டிகிரி ஃபாரன்ஹீட்அளவை ஒட்டி இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.