புதிய அரசியல் இயக்கம்: அண்ணாமலை அறிவிப்பு; 10 மணி நேரத்தில் 10 லட்சம் உறுப்பினர்கள் பதிவு

ராஜினாமாவை ஏற்றுக்கொண்டது பாஜக
புதிய அரசியல் இயக்கம்: அண்ணாமலை அறிவிப்பு; 10 மணி நேரத்தில் 10 லட்சம் உறுப்பினர்கள் பதிவு
Updated on
2 min read

சென்னை: அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜக தலைமை ஏற்றுக்கொண்ட நிலையில், புதிய அரசியல் இயக்கம் தொடங்குவதாக அவர் அறிவித்துள்ளார். இந்த இயக்கம், கட்சியாக மாறி, தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார். அவர் அறிவிப்பு வெளியிட்ட 10 மணி நேரத்தில் 10 லட்சம் உறுப்பினர்கள் அவரது இயக்கத்தில் சேர பதிவு செய்துள்ளனர்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதுதொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். கடந்த 1-ம் தேதி டெல்லி சென்ற அவர், பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

அதை ஏற்காத பாஜக, அமித் ஷா உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் மூலம் அண்ணாமலையை சமரசம் செய்ய முயன்றது. இதற்காக, 4 நாட்களாக டெல்லியிலேயே முகாமிட்டிருந்தார். எனினும், பாஜகவில் இருந்து விலகும் திட்டத்தில் உறுதியாக இருந்த அவர், ஜூன் 5-ம் தேதி முடிவை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் நேற்று காலை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, புதிய அரசியல் இயக்கம் தொடங்கும் அறிவிப்பை டெல்லியில் இருந்தவாறே அண்ணாமலை நேற்று மதியம் காணொலி வாயிலாக சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

‘‘இந்த இயக்கம், கட்சியாக மாறி, தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும். நாம் அனைவரும் முட்டாள்தனமான அரசியலில் இருந்து வெளியே வர வேண்டும். சாமானிய மனிதருக்கான ‘காமன் மேன்’ அரசியலை முன்னிறுத்த வேண்டும். அனைவரையும் அரசியலுக்கு கொண்டு வரவும், அறம் சார்ந்த அரசியலை முன்னெடுக்கவும் பயிற்சி அளிக்கும் வகையில் கோவையில் அப்துல் கலாம் பெயரில் பயிற்சி மையம் தொடங்கப்படும். உள்ளாட்சித் தேர்தலுக்கு நிறைய வேட்பாளர்களை இங்கிருந்து நாம் அனுப்புவோம்’’ என்று அண்ணாமலை தெரிவித்தார்.

காணொலி வாயிலாக நேரலையில் அவர் வெளியிட்ட இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

சென்னையில் உற்சாக வரவேற்பு: நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அண்ணாமலையை வரவேற்க, விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், தொண்டர்கள் திரண்டனர். அண்ணாமலைக்கு பூங்கொத்து வழங்கியும், வாழ்த்து முழக்கம் எழுப்பியும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். இதற்கிடையே, தான் தொடங்கும் அரசியல் இயக்கத்தில் இணையுமாறு மக்களுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்தார். இதற்காக, ‘இது நம்ம இயக்கம்’(www.wetheleaders.org) தளத்தில் பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். இவ்வாறு அவர் அறிவித்த 10 மணி நேரத்தில் 10 லட்சம் உறுப்பினர்கள் அவரது இயக்கத்தில் சேர பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகுவதாக தகவல்வெளிவரத் தொடங்கிய நிலையில், அவரது ஆதரவாளர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை கட்சித் தலைமைக்கு அனுப்பி வந்தனர். புதிய அரசியல் இயக்கம் தொடங்குவதாக நேற்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து, தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன், ஓபிசி அணி மாநிலச் செயலாளர் நரேஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் பாஜகவில் இருந்து விலகுவதாக அடுத்தடுத்து அறிவித்து வருகின்றனர்.

புதிய அரசியல் இயக்கம்: அண்ணாமலை அறிவிப்பு; 10 மணி நேரத்தில் 10 லட்சம் உறுப்பினர்கள் பதிவு
“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக உள்ளது” - பிரதமர் மோடி பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in