

சென்னை: ரயிலில் தவறவிட்ட சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான தங்கம், ரூ.1.91 லட்சம் ரொக்கம் அடங்கிய பையை, போலீஸாரிடம் ஒப்படைத்த 2 கல்லூரி மாணவர்களை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ராஜன் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஹீராலால் (50). இவர் அம்பத்தூர் ஐசிஎஃப் காலனியில் தங்க நகைக்கடை மற்றும் அடகுக்கடை நடத்துகிறார். இவர் கடந்த 2-ம் தேதி பிற்பகல் 3:30 மணியளவில், புதிய நகைகள் வாங்குவதற்காக அண்ணனூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் புறநகர் மின்சார ரயிலில் ஏறினார்.
பயணத்தில் தனது தோள் பையை இருக்கைக்கு மேலே உள்ள ரேக்கில் வைத்துவிட்டு தூங்கியதாக தெரிகிறது. ரயில் சென்னை சென்ட்ரல் வந்தபோது, தூக்கக் கலக்கத்தில் தவறுதலாக வேறொருவரின் பையை எடுத்துக்கொண்டு இறங்கினார். பின்னர் சவுகார்பேட்டை சென்று பார்த்தபோது, தனது பை மாறியதை உணர்ந்த ஹீராலால், உடனடியாக சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மாணவர்களின் நேர்மை: இதற்கிடையே, லயோலா கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவர் ஜெயஸ்வேல் (19), டிஆர்பிசிசிசி இந்து கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவர் கமலேஷ் (20) ஆகிய இருவரும் ஹீராலாலின் பையை ஆவடி ரயில்வே காவல் நிலையத்துக்கு எடுத்து வந்தனர். தாங்கள் ரயிலில் வந்தபோது தங்களது பை மாற்றி எடுத்துச் செல்லப்பட்டதாகவும் ரேக்கில் இருந்த பையை எடுத்து வந்ததாகவும் கூறினர்.
மாணவர்கள் ஒப்படைத்த அந்தப் பையில் 153.38 கிராம் தங்க நகைகள், 30 கிராம் வெள்ளி மற்றும் ரூ.1.91 லட்சம் ரொக்கப் பணம் இருந்தன. இதையடுத்து, அந்தப்பை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஹீராலாலை வரவழைத்து, ரயில்வே காவல் ஆய்வாளர் அமலாரத்தினம் முன்னிலையில் பையில் இருந்த பொருட்கள் சரிபார்க்கப்பட்டன. பின்னர், முறைப்படி நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் தங்க ஆபரணங்கள், பணம் ஆகியவை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
பையில் பல லட்சம் மதிப்புள்ள நகைகளும், பணமும் இருந்தபோதிலும், சற்றும் ஆசைப்படாமல் உடனடியாக ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்த கல்லூரி மாணவர்களின் நேர்மையை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ராஜன் வெகுவாக பாராட்டினார்.