

புதுச்சேரியில் நடந்த காங்கிரஸ் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல். படம்: எம் சாம்ராஜ்
புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என புதுச்சேரியில் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.
புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசியதாவது: இந்த மண்ணை நேசிக்கிறேன். புதுச்சேரி மக்களுடைய அன்பு, நட்பு. தோழமை இவற்றை எல்லாம் நினைத்து அடிக்கடி இங்கு வர ஆசைப்படுகிறேன். ஆனால், இப்போது இங்கு வரும்போது என் மனதில் கவலைகள் படர்கிறது.
புதுச்சேரியை ஆட்சி செய்பவர்கள் மண்ணின் மைந்தர்கள் அல்ல, எங்கோ இருந்து புதுச்சேரியை ஆட்சி செய்கின்றனர். இங்கு நடக்கும் ஆட்சி மக்களின் விருப்பத்தை செயல்படுத்தும் அரசு அல்ல, டெல்லியில் இருந்து கருத்துகளை திணிப்பவர்களின் கீழ் செயல்படும் அரசாக உள்ளது. பாஜக கொள்கை, சித்தாத்தங்களை புதுச்சேரியில் புகுத்த நினைக்கின்றனர்.
புதுச்சேரி மக்களின் எண்ணங்களை ஏற்று நடத்தும் ஆட்சி இங்கு நடக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முந்திக்கொண்டு துணைநிலை ஆளுநர் செயல்படுகிறார். இதை சரிசெய்ய தேவை மாநில அந்தஸ்து. பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.ஒரு அரசர் போல புதுச்சேரியை துணைநிலை ஆளுநர் ஆட்சி செய்வதை நாங்கள் விரும்பவில்லை. புதுச்சேரி மக்கள்தான் இந்த அரசை ஆள வேண்டும்.
எனவேதான், ‘மாநில அந்தஸ்து வேண்டும்’ என்று கூறுகிறோம். நாங்கள் அதை கண்டிப்பாக தருவோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 6 மாதங்களில் புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். அடுத்த தலைமுறை தலைவர்கள் உள்ளாட்சித் தேர்தல் மூலம் அரசு நிர்வாகத்துக்கு வருவார்கள்.
அனைத்து துறை பணிகளுக்கும் 30 சதவீத கமிஷன் பெறப்படுகிறது. மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரெஸ்டோ பார்கள், மதுபான கடைகள் வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்களுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளன. இதை அகற்ற கோரிக்கை வைத்தும் அரசு செவி சாய்க்கவில்லை.
கோயில் நிலம் கொள்ளை: மக்களிடம் மட்டுமல்ல, ஆண்டவனிடமும் கொள்ளை அடித்துள்ளனர். கோயில் நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இரவில், பெண்கள், குழந்தைகள் நடமாட முடியவில்லை. பள்ளி, கல்லுாரிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து ஆளுநருக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. புதுவை மக்களின் உண்மையான குரலை ஒலிக்கும் அரசை, இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்வு செய்யுங்கள்.இவ்வாறு ராகுல் பேசினார்.