சென்னை ராஜ் பவனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வரலாற்று அறிஞர் முனைவர் எம்.எல்.ராஜா எழுதிய ‘இந்திய வரலாறு, காலவரிசை ஆகியவற்றின் அடிப்படையில் கலியுக கல்வெட்டுகள்’ என்ற நூலின் 2 தொகுதிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். நூலின் முதல் பிரதியை பத்மவிபூஷண் டாக்டர் பத்மா சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். உடன் தொல்லியல் அறிஞர் கே.தரன், ஆளுநரின் முதன்மை செயலர் ஆர்.கிர்லோஷ் குமார்.
சென்னை: காரல் மார்க்ஸை பின்பற்றியவர்கள் இந்திய நாகரிகத்தையும், கலாச்சாரத்தையும் அழித்துவிட்டனர் என்று, ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார். கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், வரலாற்று ஆசிரியருமான எம்.எல்.ராஜா எழுதிய, ‘கலியுகம் பற்றிய கல்வெட்டுகள்’ நூல் வெளியீட்டு விழா ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி நூலை வெளியிட்டு பேசியதாவது: நான் படித்த காலத்தில் பள்ளியிலும் வீட்டிலும், ஊரிலும் சொல்லப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறாக இருந்தது. அவை உண்மையில் இருந்து ரொம்ப தூரம் விலகி இருந்ததை என்னால் காண முடிந்தது.
அந்தக் காலக்கட்டத்தில் ஆங்கிலேயர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உயிருடன் இருந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக ஆங்கிலேயர் ஆட்சி நன்றாக இருந்தது. அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்று வரலாற்று புத்தகங்களில் எழுதியுள்ளனர்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, ஆங்கிலேயர்களின் பிரதி நிதிகள்தான் ஆட்சி நடத்தினர். காரல் மார்க்ஸின் ‘மூலதனம்’ நூலில், ‘ஏகாதிபத்திய கொள்கைக்கு நான் எதிரானவன். ஆனால், இந்தியாவுக்கு ஏகாதி பத்யம் தேவை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சுதந்திரத்துக்குப்பிறகு காரல் மார்க்ஸை பின்பற்றியவர்கள் நமது நாகரிகத்தையும், கலாச்சார வரலாற்றையும் அழித்துவிட்டனர். ஆனால், இங்கு வெளியிடப்பட்ட நூலின் ஆசிரியரைப் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் நமது வரலாற்றை மீட்டெடுக்க தொடர்ந்து முயற்சி செய்கின்றனர்.
இந்தியா தற்போது விழித்துக் கொண்டிருக்கிறது. கிராமப்புறங்களில் இன்னும் கலியுகத்தை நம்புகிறார்கள். ஆனால், கல்லூரி மாணவர்கள் படிக்கும் பாடப்புத்தகங்களில் அது ஒரு புனைவுக் கதையாகவே சித்தரிக்கப்படுகிறது.
900-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் நம் நாட்டைத் தாண்டியும், பல்வேறு இடங்களில் கிடைத்துள்ளன. நாட்டின் வரலாற்றை புரிந்து கொள்வதில் இந்நூல் முக்கிய பங்கு வகிக்கும். நம் வரலாறு குறித்து மாணவர்களும் ஆய்வில் ஈடுபட வேண்டும் என்று கூறினார்.