“இறைவன் மீது நம்பிக்கை வைத்தால் அனைத்து வளமும் கிடைக்கும்” - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

ராமகிருஷ்ண மட சேவை மைய திறப்பில் கருத்து
படம்: எம்.சாம்ராஜ்

படம்: எம்.சாம்ராஜ்

Updated on: 
2 min read

புதுச்சேரி: “இறைவன் மீது நம்பிக்கை இருந்தால் அனைத்தும் கிடைக்கும்; வேண்டும் காரியம் வெற்றி பெறும்; நம்பிக்கை இல்லாவிட்டால் எதுவும் இல்லை. அறிந்தவர்களுக்குத்தான் இதைப் பற்றித் தெரியும்” என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறினார்.

சென்னை ராமகிருஷ்ண மடத்தின் புதிய கிளை மடம், புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. மாலையில் இந்த வளாகத்தில் உள்ள சேவை மையக் கட்டிடத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

அப்போது பேசிய முதல்வர், “தெய்வ நம்பிக்கையை வளர்க்கின்ற வகையில் ராமகிருஷ்ண மடத்தின் மையங்கள் செயல்படுவது உண்மையில் மகிழ்ச்சி. புதுச்சேரி சிறிய மாநிலம். ஆன்மிக பூமி. சித்தர்கள் வாழ்ந்த. வாழந்து கொண்டிருக்கிற பூமி. எப்போதும் ஆன்மிகத்துக்கு குறைவில்லாத பூமி.

இந்த பூமியில் எத்தனையோ சித்தர்கள், சன்னியாசிகள், முனிவர்கள் வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இந்த பூமி எப்போதும் செழிப்பாக இருக்கிறது. பிற மாநிலங்கள் பொறாமை படக்கூடிய அளவில் கூட பொருளாதார நிலையில் உயர்ந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். அதற்கு காரணம் இது ஆன்மிக பூமி.

இறைவன் மீது நம்பிக்கை இருந்தால் அனைத்தும் கிடைக்கும்; வேண்டும் காரியம் வெற்றி பெறும்; நம்பிக்கை இல்லாவிட்டால் எதுவும் இல்லை. அறிந்தவர்களுக்குத்தான் இதைப் பற்றித் தெரியும். எல்லோருக்கும் தெரிந்து விடாது. இறைவன் அருள் இல்லாவிட்டால் எதுவும் இல்லை. அது மிகமிக முக்கியமானது.

அனைவரும் ஆன்மிக நிலையை உணர்ந்து நாள்தோறும் வழிபாட்டில் ஈடுபட்டு வந்தால் நினைக்கிற காரியம் கைகூடும். அவர்கள் வாழ்க்கையில் நன்றாக இருப்பார்கள். ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வது என்பதே இறைவனுக்கு நாம் செய்கிற பணி. அது நமக்கு பெரிய பாக்கியத்தை கொடுக்கக்கூடியது.

அப்பா பைத்தியம் சாமிகள் விபூதியிட்டு, எனது தலையில் கையை வைத்தது எனக்கு மட்டும் தான் தெரியும். அது எல்லோருக்கும் தெரியாது. தொடக்கத்தில் வெறுமனே கோயிலுக்குச் சென்று வருவேன். அப்பா பைத்தியம் சாமிகளைப் பார்த்து அவரது அருள் கிடைத்தபிறகுதான் இறை நம்பிக்கை வந்தது.

மற்றவர்கள் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று இறை நம்பிக்கை உடையோர் சேவை செய்வார்கள். துறவிகளான இங்குள்ள சுவாமிகளால் அது முடியும். அந்த வகையில் ராமகிருஷ்ண மடத்தின் கிளையில் இந்த சேவை மையக் கட்டிடத்தை திறந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது.

இந்த மடத்தை கட்டுவதற்காக என்னை அணுகியபோது சில சிக்கல்கள் இருந்தன. அவற்றை சரி செய்து கொடுத்து, இங்கே மடம் அமைந்துள்ளது. மருத்துவ உதவியோடு இறையருள் பெறுகின்ற வகையில் அமைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. எல்லோரும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்பதுதான் நம் அனைவருடைய எண்ணம்.

இந்த மடத்தின் மூலம் புதுச்சேரி மாநில மக்களுக்கு அந்த மகிழ்ச்சி கிடைக்கிறது என்ற அளவில், அனுமதி வழங்கிய எனக்கு அது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். இந்நிகழ்வில் ராமகிஷ்ண மடம் மற்றும் மிஷன் தலைவர் ஸ்ரீமத் கவுதமானந்தஜி மகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

<div class="paragraphs"><p>படம்: எம்.சாம்ராஜ்</p></div>
ஆதிச்சநல்லூரில் மழையில் சேதமடையும் தொல் பொருட்கள்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in