“புதிய குடிநீர் திட்டத்துக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு தேவை” - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

“புதிய குடிநீர் திட்டத்துக்கு  விவசாயிகள் ஒத்துழைப்பு தேவை” - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

படம்: எம்.சாம்ராஜ்

Updated on
2 min read

புதுச்சேரி: புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பேரவையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பாஜக எம்எல்ஏ ஜான்குமார் பேசும்போது, “மாநில வருவாய் ரூ.6,800 கோடியில் இருந்து ரூ.7,600 ஆக உயர்ந்துள்ளது. சுமார் ரூ.800 கோடிக்கு வருவாய் உயர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் அதிக முதலீடு செய்வதற்கு பதிலாக, 16 ஆயிரம் வீடுகளில் மழைநீரை சேகரித்தால் நிலத்தடிநீர் மட்டம் உயரும். இதன் மூலம் நமக்கு நல்ல குடிநீர் கிடைக்கும்.

ஸ்மார்ட் மீட்டரால் இப்போது மின் கட்டணம் அதிகமாக வருகிறது. இதனால் மின்சாரத்தை சேமிக்கும் நிலைக்கு மக்கள் வந்து விட்டனர். அதேபோல், தண்ணீரையும் சிக்கனமாக பயன்படுத்தி சேமிக்க வேண்டும். புதுச்சேரிக்கு பலர் குடியேறியதற்கு காரணமே இங்குள்ள குடிநீர்தான். அந்த நிலை எல்லாம் இப்போது மாறி, நமக்கு உப்புநீர் கிடைப்பது வருத்தம் அளிக்கிறது” என்று பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது குறுக்கிட்ட பேரவையின் தற்காலிகத் தலைவர் அன்பழகன், “அனைத்து உறுப்பினர்களும் குடிநீர் பிரச்னை குறித்து பேசுகின்றனர். அதனால் பொதுப்பணித்துறை அமைச்சர் அவைக்குள் வேண்டும்” என்றார்.

உடனே எழுந்த முதல்வர் ரங்கசாமி, “வேலை நிமித்தமாக அமைச்சர் வெளியே சென்றுள்ளார். நம்முடைய அரசு புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள மக்களுக்கு நல்ல குடிநீர் கொடுப்பதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறது. இந்தாண்டு நிச்சயமாக நல்ல குடிநீர் வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுத்து, நகரப்பகுதி மக்களுக்க நிச்சமயாக நல்ல குடிநீர் கொடுக்கப்படும்.

இதில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும் ஒன்று. இதற்கான இடமும் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த நாளில் கடல்நீர் மட்டம் குறைவாகவும், அதிகமாகவும் இருக்கும் என்று கணக்கெடுத்து, அதற்கேற்ப அமைக்கப்பட உள்ளது. இதற்கான புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

பண்டசோழநல்லூர், சிவராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் 1,700 அடிக்கு ஆழ்துளை கிணறு போடப்பட்டு அங்குள்ள தண்ணீர் திருக்காஞ்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கிருந்து நகரப்பகுதி மக்களுக்கு நல்ல குடிநீர் கொடுப்பதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்துக்காக விவசாயிகளிடம் எம்எல்ஏக்கள் பேசி வருகின்றனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேல் ஊற்றில் உள்ள நீர் விவசாயத்தக்கு போதுமானது. நகரப்பகுதி மக்களுக்கான குடிநீருக்கு 1,700 அடியில் உள்ள தண்ணீரை பயன்படுத்துவதுதான் திட்டத்தின் முக்கிய நோக்கம்.

1,700 அடியில் எடுக்கப்படும் தண்ணீர் எப்போதும் வற்றாத நிலையில் இருக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த. மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க விவசாயிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

தண்ணீரை சேமிக்கவும், எங்கெல்லாம் டிடிஎஸ் அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நல்ல குடிநீர் கொடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிலத்தடி நீரை மேம்படுத்தவும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தவும் அரசு கவனம் செலுத்தும்.

லாஸ்பேட்டை, கோரிமேடு உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் சேகரிக்க கட்டமைப்பும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து ஏரி, குளங்களை ஆழப்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து ஜான்குமார் எம்எல்ஏ பேசினார்.

“புதிய குடிநீர் திட்டத்துக்கு  விவசாயிகள் ஒத்துழைப்பு தேவை” - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட யார் காரணம்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in