

புதுச்சேரி: ஆளுநர் உரையின்போது புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட யார் காரணம் என விளக்கப்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடந்தது.
அப்போது திமுக எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன் பேசுகையில், “துணைநிலை ஆளுநர் தமிழில் பேசியதற்கும், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடியதற்கும்தான் நன்றி தெரிவிக்க வேண்டும். ராஜ்பவன் தொகுதியில் பல பிரச்சினைகள் உள்ளன தூண்டில் வளைவு, அரசு மருத்துவமனை இடிந்து விழும் நிலையில் உள்ளதை சரி செய்வது பற்றிய அறிவிப்புகள் வரவில்லை” என்றார்.
அதற்கு பேரவைத்தலைவர் அன்பழகன், “தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக மத்திய அரசு பல சுற்றிக்கைகளை அனுப்பியது, நீதிமன்ற வழக்குகளும் உள்ளன. அந்த நேரத்தில் புதுச்சேரி சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதல்வர் ரங்கசாமி முன்னுரிமை அளித்தார்.
அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் மற்றும் நேரு எம்எல்ஏ ஆளுநர் உரையின்போது தமிழ்த்தாய் வாழ்த்து சட்டப்பேரவையில் முதலில் பாட வேண்டும் என்று கடிதங்கள் அளித்தனர். அவர்களின் கடிதத்தை முதல்வரிடம் தந்தேன்.
அப்போது ‘சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும்’ என உடனடியாக முதல்வர் உறுதிபட தெரிவித்தார்” என்றார். இதை உறுப்பினர்கள் அனைவரும் மேஜையை தட்டி வரவேற்றனர்.