கார்கில் வெற்றி தின நிகழ்ச்சியில் வெளிப்பட்ட பூசல் - தனியாக வந்து மரியாதை செலுத்திய பாஜகவினர்

கார்கில் வெற்றி தின நிகழ்ச்சியில் வெளிப்பட்ட பூசல் - தனியாக வந்து மரியாதை செலுத்திய பாஜகவினர்
Updated on
1 min read

புதுச்சேரி: கார்கில் வெற்றி தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் துணைநிலை ஆளுநர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத பாஜக அமைச்சர் தனியாக பங்கேற்று மரியாதை செலுத்தினார்.

1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் வெற்றி பெற்ற தினத்தை இந்தியா ஆண்டுதோறும் ஜூலை 26 இல் கொண்டாடி வருகிறது. கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களை நினைவு கூறும் வகையிலும், எல்லையை காக்கும் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில் புதுச்சேரி அரசு சார்பில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் அன்பழகன், அமைச்சர்கள் ராஜவேலு, சிவக்கொழுந்து, எம்எல்ஏக்கள் ஏகேடி ஆறுமுகம் (என்ஆர்காங்), செந்தில் (திமுக), அழகு (சுயேட்சை) என பலரும் கலந்துகொண்டு கார்கில் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பாஜக பங்கேற்கவில்லை: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. தற்போது பாஜகவுக்கு கடந்த முறை வகித்த அமைச்சர்கள் பதவிகளை ரங்கசாமி ஒதுக்கி தராததால் பாஜக தரப்பு கோபத்தில் உள்ளது. முதல்வர் ரங்கசாமி தந்த கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனும் ஒப்புதல் தரவில்லை.

தொடர்ந்து அரசு நிகழ்வுகளை, பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பதை தவிர்த்து வருகின்றனர். இந்த சூழலில், இன்றைய நிகழ்விலும் அவர்கள் பங்கேற்கவில்லை. இதுபற்றி விசாரித்தபோது தனியாக வந்து மரியாதை செய்வார்கள் என்றனர்.

முதல்வர் பங்கேற்ற அரசு நிகழ்வு முடிந்த பிறகு பாஜக மாநிலத்தலைவர் ராமலிங்கம் தலைமையில் அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் பேரவைத்தலைவர் செல்வம் உள்ளிட்ட பாஜகவினர் தனியாக வந்து கார்கில் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 

கார்கில் வெற்றி தின நிகழ்ச்சியில் வெளிப்பட்ட பூசல் - தனியாக வந்து மரியாதை செலுத்திய பாஜகவினர்
மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது ஏன்? - விளக்கம் கேட்டு அமித் ஷாவுக்கு ராகுல் கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in