

ராகுல் காந்தி
புது டெல்லி: ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கிய பேரணியின் போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறையினரின் ஒடுக்குமுறை குறித்து விளக்கம் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
ஜூலை 20ம் தேதி தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தலைமையில் நாடாளுமன்றத்தை நோக்கி நடந்த பேரணியில் ஈடுபட்டவர்களை கலைக்க தடியடி, கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், ‘ மாணவர்கள் மற்றும் அமைதியான முறையில் போராடியவர்கள் மீதான இந்த ஒடுக்குமுறை காட்டுமிராண்டித்தனமான தாக்குதல். மாணவர்கள் நியாயமான மற்றும் பொறுப்புள்ள கல்வி முறையைக் கோரினர். அவர்களின் குரலைக் கேட்பதற்குப் பதிலாக, பாதுகாப்புப் படையினர் கொடிய ஆயுதங்கள் மற்றும் கண்ணீர்ப்புகை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி அவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்துள்ளனர். மாணவிகளும் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். அவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள், ஒரு பத்திரிகையாளர் உட்படப் பலர் கடுமையான காயங்களுக்கு ஆளாகியிருப்பதை வெளிப்படையாகக் காட்டுகின்றன. பெல்லட் துப்பாக்கித் தாக்குதலுக்குள்ளாகி, தற்போது கடும் வலியுடன் இருக்கும் 19 வயது மாணவர் சாஹில் லோச்சாபை நான் சந்தித்தேன்; அவருக்கு ஒரு கண் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது.
தேசியத் தலைநகர் டெல்லியில் பாதுகாப்புப் படை உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. உள்துறை அமைச்சராக, மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்ட கொடிய தாக்குதல் முறைகளைப் பயன்படுத்த நீங்கள் ஒப்புதல் அளித்தீர்களா?. இல்லையென்றால், யார் ஒப்புதல் அளித்தது?. மாணவர்களைத் தடிகளால் தாக்கும் சீருடை அணியாத நபர்கள் காவல்துறையினரா அல்லது வெளி நபர்களா? அவர்களைப் பணியில் ஈடுபடுத்தியது யார்?.
இத்தகைய கொடூரமான நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் எதிர்காலமான இளைஞர்களும் மாணவர்களும் இதற்கான பதிலை கோருகின்றனர்’ என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.