

படங்கள்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.14,300 கோடிக்கான வரியில்லா பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி இன்று மதியம் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து சட்டப்பேரவையில் முதல்வர் ஆற்றிய உரை: 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ.14,300 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சொந்த வருவாய் வரவினங்கள் ரூ.7,890.41 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியும் உள்ளடக்கிய மத்திய நிதி உதவி ரூ.3,517.86 கோடியாகும். மத்திய சாலை நிதி ரூ.25 கோடி மற்றும் மத்திய அரசுத் திட்டங்களின்கீழ் வழங்கும் நிதி ரூ.531.80 கோடியாக இருக்கும்.
நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக பேரம் பேசி வாங்கும் கடனையும் சேர்த்து ரூ.2,148.69 கோடி வரை நிகரக் கடன் வரம்புக்கு இந்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் மத்திய அரசின், மூலதன முதலீட்டுக்கான மாநிலங்களுக்கான சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் ரூ.186.24 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2026-27-ம் நிதியாண்டுக்கான ரூ.14,300 கோடிக்கான பட்ஜெட்டில் ரூ.12,115 கோடி வருவாய் செலவினங்களுக்கும், ரூ. 2,185 கோடி மூலதன செலவினங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மக்கள் நலத்திட்டங்களை செல்படுத்தி வரும் அதே வேளையில், நமது மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இதன் விளைவாக 2021-22-ம் நிதியாண்டில் மொத்த செலவினங்களில் 1.66 விழுக்காடாக (ரூ.162.78 கோடி) இருந்த மூலதன செலவீனம், 2026-27-ம் நிதியாண்டில் 7.93 விழுக்காடாக (ரூ.1,134.58 கோடி) அதிகரித்துள்ளது. இதன் மூலதன செலவீனம் கிடத்தட்ட ரூ.971.80 கோடி அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மூலதன முதலீட்டுக்கான மாநிலங்களுக்கான சிறப்பு நிதி திட்டத்தின்கீழ் மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகள் வட்டியில்லா நீண்டகால கடன் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. எனது அரசின் தொடர் முயற்சியின் காரணமாக 2025-26-ம் நிதியாண்டில், புதுச்சேரி ஆட்சிப்பரப்புக்கு ரூ.227.34 கோடி கடன் வழங்கப்பட்டதுடன், நடப்பு நிதியாண்டுக்கு ரூ. 186.24 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
2026-27-ம் ஆண்டுக்கான ரூ.14,300 கோடி பட்ஜெட்டில் திட்ட மதிப்பீட்டில், ஊதியத்துக்காக ரூ.2693.40 கோடி (18.83 சதவீதம்), ஓய்வூதியத்துக்காக ரூ.1619.73 கோடி(11.33 சதவீதம்), கடன் திப்பிச் செலுத்துதல் மற்றும் வட்டி செலுத்துதலுக்காக ரூ.1981.57 கோடி(13.86 சதவீதம்) மற்றும் மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக ரூ. 2327.86 கோடி(16. 28 சதவீதம்) ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசின் முக்கிய செலவினங்களான முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மீனவர்களுக்கான ஓய்வூதியம், குடும்பத் தலைவிக்கு நிதியுதவி, விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம், இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்குதல், சமையல் எரிவாயு மானியம், மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்குதல் மற்றும் பல முக்கிய நலத்திட்டங்களுக்காக ரூ.2202.45 கோடி (15.40 சதவீதம்) ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான மானிய உதவியாக ரூ.560 கோடி (3.92 சதவீதம்) மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்காக ரூ.1,082 கோடி (7.57 சதவீதம்) ஒதுக்கப்பட்டுள்ளது.
2026-27-ம் நிதியாண்டில் சிறப்பு நிதி அமைப்புகளுக்காக ரூ.3070.04 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மகளிர் சிறப்பு நிதியமைப்புக்காக ரூ.1676.89 கோடியும், இளைஞர் சிறப்பு நிதியமைப்புக்காக ரூ. 647.84 கோடியும், பசுமை சிறப்பு நிதியமைப்புக்காக ரூ.745.31 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
ஒரு மணி நேரம் 40 நிமிடங்களில் முதல்வர் ரங்கசாமி இந்த பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார்.