

சென்னை: “லஞ்சம் கொடுத்ததாகக் கூறும் அமைச்சர் மரிய வில்சனை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்” என திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திராவிட மாடல் ஆட்சியால் தமிழகம் 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற உள்ளது. இன்றைக்கு பள்ளிக் கல்வித் துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதத்தை காலையிலிருந்து நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக, “இந்தத் திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம்; நீங்கள் கொண்டு வந்தீர்கள்” என்று பேசிக்கொண்டிருப்பார்கள்.
ஆனால், இந்த நவோதயா பள்ளிகள் நமக்குத் தேவையா, தேவையில்லையா என்பது தொடர்பாக, தற்போது ஆளுகின்ற அரசாங்கமே நீதிமன்றத்தில் ஓர் அபிடவிட் தாக்கல் செய்திருக்கிறது. அந்த அபிடவிட்டில் நம்முடைய பள்ளிக் கல்வித் துறை எவ்வாறு செயல்பட்டு வருகிறது, தமிழகத்துக்கு எவ்வாறு பெருமை தேடித்தந்துள்ளது என்பதையெல்லாம் தெளிவாகப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக, திராவிட மாடல் அரசாங்கத்தின் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏறத்தாழ 1,922 மாணவச் செல்வங்கள், பிரீமியம் கல்வி நிறுவனங்களில் - ஐஐடி, என்ஐடி, ஐஐஎம், நிஃப்ட், நேஷனல் லா யுனிவர்சிட்டி போன்ற நிறுவனங்களில் - சேருவதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு ஜேஇஇ, சிஎல்ஏடி (CLAT ) போன்ற தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதற்கான கல்வி முறையையும் நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.
அதே நேரத்தில், கல்வித் துறைக்கு சமக்ர சிக்ஷா திட்டத்தின் மூலம் வர வேண்டிய நிதி இன்னும் முழுமையாக வரவில்லை. அந்த நிதியை நீங்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில், நம்முடைய சாதனைகள் அனைத்தையும் அந்த அபிடவிட்டில் மிகவும் அழகாகப் பட்டியலிட்டு, உச்சநீதிமன்றத்தில் எஸ்எல்பி ஒன்றையும் தாக்கல் செய்திருக்கிறார்கள். அதுவே நமக்கான மிகப்பெரிய ஓர் அத்தாட்சியாக நான் பார்க்கிறேன்.
கடந்த இரண்டு, மூன்று நாட்களாக நான் குறிப்பாகக் கவனித்த ஒரு விஷயம் இருக்கிறது. “அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்திட்டம்” என்ற திட்டத்தின் மூலம், கடந்த காலத்தில் மட்டும் ஏறத்தாழ 385 மாணவச் செல்வங்கள் வெளிநாடுகளில் - மலேசியா, லண்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரு மாணவச் செல்வருக்கு ஏறத்தாழ ரூ.35 லட்சம் மதிப்பில் இந்த அரசாங்கம் முதலீடு செய்கிறது. இதை வெறும் செலவு என்று கூட சொல்லக்கூடாது; இது ஒரு முதலீடு.
அந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வரும் மாணவர்களில் ஒருவர்தான் பாரதிதாசன். நீங்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் அவரைப் பார்த்திருப்பீர்கள். அவர் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு வர வேண்டிய நிதி சரியாக வரவில்லை என்று அவர் கூறியிருக்கிறார். கடந்த ஆட்சிக் காலத்தில்கூட எங்களுக்கு முறையாக நிதி கிடைத்தது; தற்போது இன்னும் வரவில்லை. எனவே, அதை விரைவாக விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர் வன்னியரசிடம் அந்த மாணவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.
அமைச்சரும், “நான் சொல்கிறேன்; நீங்கள் தொடர்புகொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த மாணவர், “எந்தெந்த தேதிகளில் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன், எந்தெந்த தேதிகளில் உங்களைத் தொடர்புகொண்டிருக்கிறேன், எந்தெந்த நேரங்களில் அம்பேத்கர் சர்க்கில் அமைப்பை சேர்ந்த நண்பர்கள் உங்களைச் சந்தித்திருக்கிறார்கள்” என்று அனைத்தையும் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.
இன்றைக்கு அதைப் பார்க்கும்போது, மீண்டும் அதே பிரச்சினை தொடர்பாக அமைச்சர், “நாங்கள் விளக்கம் கேட்டிருக்கிறோம்; இன்னும் எங்களுக்கு சரியான பதில் வரவில்லை. அது வந்தால்தானே பணத்தை வழங்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.
இதற்கு மேலாக, இங்கிலாந்தைப் பொறுத்தவரை சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அங்கு, “ஒரு மாநில அரசின் கல்வி உதவித்தொகையை எங்களால் ஏற்க முடியாது; இது நாடு-நாடு சார்ந்த விவகாரம். இந்திய அரசின் ஒப்புதல் தேவை” என்று கூறுகிறார்கள்.
எனவே, இதற்காக ஏதேனும் முயற்சிகளை இந்த அரசு எடுத்திருக்கிறதா என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். நம்முடைய முதல்வர் டெல்லி செல்லும்போதும், இங்கே ஒன்றிய அரசின் உயரதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் வரும்போதும், அவர்களிடம் இந்தக் கோரிக்கையை வைத்திருக்கிறார்களா என்பதையும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
ஏதோ திமுகவைச் சேர்ந்த குழந்தைகளுக்காக மட்டும் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் கிடையாது. இதில் பயன்பெற்றவர்கள் அனைத்து இயக்கங்களையும் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஏன், இதே சட்டபேரவையில் அமர்ந்திருக்கக் கூடிய புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் பிள்ளைகள்கூட இந்தத் திட்டங்களில் பயன்பெற்றிருக்கலாம். அந்த அளவிற்கு அனைவருக்கும் பொதுவான திட்டங்களாகவே இவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, பள்ளிக் கல்வித் துறைக்கான இன்றைய நிதி ஒதுக்கீடு, கடந்த ஆண்டைக் காட்டிலும் சற்றுக் குறைவாகவே இருக்கிறது. அதை இன்னும் அதிகரிக்க வேண்டும். ஏனென்றால் பள்ளிக் கல்வித் துறை என்பது சாதாரணமான துறை கிடையாது. பல்வேறு துறைகள் இருக்கின்றன என்று நான் பலமுறை பேசியிருக்கிறேன். ஆனால் பள்ளிக் கல்வித் துறையுடன் தமிழ் வளர்ச்சித் துறையும் இணைக்கப்பட்டிருக்கிறது; டிஐபிஆர்-ம் அதனுடன் தொடர்புடைய பொறுப்புகளை வகிக்கிறது. இது மிகப்பெரிய பணிச்சுமை.
அந்த அமைச்சர் இதையெல்லாம் எவ்வாறு கையாளுகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் பள்ளிக் கல்வித் துறைக்கு தனியாக முழுமையான கவனம் செலுத்தக்கூடிய ஒரு அமைச்சர் இருந்தால்தான், அதில் இருக்கக்கூடிய சாதக, பாதக அம்சங்களைக் கண்டறிந்து, அவற்றைச் சீர்படுத்த முடியும்.
சமீபத்தில் சேலத்தில் ஒரு பள்ளியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பணியமர்த்தப்பட்ட விவகாரம் மிகப்பெரிய பிரச்சினையாகியுள்ளது. நான் தொடர்ந்து ஒரு விஷயத்தைச் சொல்லி வருகிறேன். இந்த நூறு நாட்களில் எல்லாவற்றையும் உடனடியாக மாற்றிவிட முடியுமா என்று கேட்டால், சில நேரங்களில் “நேரம் இல்லை” என்று சொல்லலாம்.
ஆனால் இந்த நூறு நாட்களுக்கு முன்பாக, கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் நாங்கள் ஒரு ப்ளூபிரிண்ட் போட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்கெங்கு பிரச்சினைகள் ஏற்பட்டன, அவற்றை எவ்வாறு தீர்க்க வேண்டும், அதற்கேற்ப எவ்வாறு திட்டங்களைத் தீட்ட வேண்டும், குறிப்பாக வெளியாட்கள் உள்ளே வராத வகையில் எவ்வாறு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்பதுவரை, அன்றைய முதல்வர் அறிவுறுத்தலின்படி செய்து வைத்திருக்கிறோம்.
“நூறு நாட்கள்தானே ஆகிறது” என்ற காரணத்தை நீங்கள் கூற முடியாது. கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் நீங்களே, “நல்ல நல்ல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள்; அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படாமல் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்று கூறியிருக்கிறீர்கள்.
அப்படியென்றால், அந்தத் திட்டங்களைச் சரியாக செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் எங்களுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டபோது, அதை எவ்வாறு எதிர்கொண்டோம், அதற்கேற்ப எவ்வாறு அரசாணைகளைப் பிறப்பித்து பிரச்சினைகளைத் தீர்த்தோம் என்பதையும் நாங்கள் செய்து கொடுத்திருக்கிறோம்.
மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களை நீங்கள் தொடர்ந்து முறையாகப் பின்பற்றினாலே போதும். அதன் மூலம் நம்முடைய பிள்ளைகள் இன்னும் பல சாதனைகளை நிச்சயமாகப் படைப்பார்கள். இப்போது நம்முடைய திருவெறும்பூர் தொகுதியில், துவாக்குடியில் ஒரு மாடல் பள்ளியை கொண்டு வந்திருக்கிறோம். அந்த மாடல் பள்ளியில் 74 குழந்தைகள் மருத்துவப் படிப்பில் சேருவதற்குத் திட்டமிட்டு படித்து வருகிறார்கள். இன்று வந்துள்ள செய்தியையும் சேர்த்து, 37 குழந்தைகளுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்திருக்கிறது.
நான் சொல்வது, இது ஒரு மாவட்டத்தில் மட்டும் நடக்கக்கூடிய விஷயமாக இருக்கக்கூடாது. எல்லா மாவட்டங்களிலும், ஒன்றிய அளவிலும் இதுபோன்ற பள்ளிகளை உருவாக்க வேண்டும். அன்றைக்கே இதுபோன்ற பள்ளிகளை ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பார்த்து, ஆய்வு செய்து, ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாகச் செயல்படுத்தியிருக்கிறோம்.
எனவே, இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் திட்டங்களுக்கு இந்த அரசாங்கம் இன்னும் அதிகமான கவனம் செலுத்த வேண்டும். இன்றைக்கு எவ்வளவு முதலீடுகள் வந்தாலும், எவ்வளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கினோம் என்று சொன்னாலும், பள்ளிக் கல்வித் துறையில் தொடக்கக் கல்வியிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அடித்தளம் சரியாக இருந்தால்தான் அந்தக் குழந்தைகள் அடுத்ததாகக் கல்லூரிக்குச் செல்ல முடியும்; அதன் மூலம் நல்ல வேலைவாய்ப்புகளையும் பெற முடியும்” என்றார்.
பின்னர், இன்று நிதியமைச்சர் உயர்கல்வி சம்பந்தமாக அவர் பேசிக்கொண்டிருக்கும்போது, அதற்குச் சம்பந்தமே இல்லாமல் திடீரென்று இடையில், “இதற்கு நானே சாட்சி; இந்த எவிடன்ஸ், அந்த எவிடன்ஸ்” (லஞ்சம் தொடர்பாக) என்று கூறுகிறார். அவர் ஒன்றும் பொதுக்கூட்டத்தில் பேசவில்லை. அவர் நின்று பேசிய இடம் சட்டப்பேரவை. சட்டப்பேரவையில் யார் நின்று என்ன வார்த்தை பேசினாலும், அதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
சட்டப்பேரவைக்கு வெளியே பேசுவதற்கும், சட்டப்பேரவையில் நின்று பேசுவதற்கும் சட்டரீதியாக வேறுபாடுகள் இருக்கின்றன. எனவே, “கொடுத்தேன், கொடுத்தேன்” என்று ஆதாரமில்லாமல் கூறுவது மிகப்பெரிய தவறு. குறிப்பாக, இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருவரால் என்மீது அவதூறான குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஒரு அலுவலகத்தை வைத்து இவர்கள் இதையெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருந்தது. அதற்காக நான் அவர்மீது ரூ.50 கோடி மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.
கடந்த டிசம்பர் மாதம், முறையாகப் பள்ளிகள் நடத்தப்படவில்லை என்பது தொடர்பாக உள்ளூர் கல்வி அதிகாரிகள் கண்டறிந்தபோது, உடனடியாக அந்த நபர்மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். “அவருடைய பின்னணி இப்படிப்பட்டது” என்று அதிகாரிகள் கூறியபோதும், “அவர் யாராக இருந்தாலும் பரவாயில்லை; முறையான அனுமதி இல்லாமல் பள்ளி நடத்தப்பட்டிருந்தால் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று கூறினேன்.
அவர் அனுமதி இல்லாமல் பள்ளி நடத்தியது மட்டுமல்லாமல், சில இடங்களில் போலியாகக் கையெழுத்திட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி தொடங்குவதாகக் கையெழுத்திட்டு, பல்லாவரத்தில் பள்ளியை நடத்தி வந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இது தொடர்பாக அவருக்கு சம்பந்தப்பட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டு, விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில்தான் அவர் பேசியிருக்கிறாரா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு அமைச்சரின் நம்பகத்தன்மையை பாதிக்கும் வகையில் இத்தகைய அவதூறான குற்றச்சாட்டுகளை வைப்பது மிகவும் தவறானது.
அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்களை வழங்க வேண்டும். ஒரு அமைச்சராக இருந்து “நானே சாட்சி” என்று கூறுவது மிகவும் தவறானது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை. அவர் “நானே சாட்சி” என்று கூறியிருப்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவரை உடனடியாக அழைத்து விசாரிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய முதல் கோரிக்கை.
அவர் பேசும்போது ஒவ்வொன்றாகப் பேசிக்கொண்டே இருக்கிறார். சட்டப்பேரவையில் விவாதம் நடைபெறும்போது, எதிர்க்கட்சித் தலைவர் அடிக்கடி சொல்வதுபோல, விவாதத்தை எவ்வாறு திசைதிருப்புவது என்பதிலேயே அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.
உதாரணமாக, ஆளுங்கட்சியைச் சார்ந்த ஒரு வழக்கறிஞர், ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்திருக்கிறது என்று குற்றச்சாட்டு கூறுகிறார். அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த வழக்கறிஞர் பின்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அதேபோல், ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் மீது பாலியல் குற்றச்சாட்டு வருகிறது. ஒரு ஒப்பந்ததாரர், சம்பந்தப்பட்ட அமைச்சரை தொலைபேசியில் தொடர்புகொண்டு மிரட்டுகிறார்.
மிரட்டியவர் அப்படியே இருக்கிறார்; ஆனால் யார் மிரட்டப்பட்ட்வர் , அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார். இவ்வாறு ஒவ்வொன்றாக நிகழ்வுகள் நடைபெறும்போது, கடந்த இரண்டு நாட்களாக அவர்களுடைய ஆளுங்கட்சிக் கூட்டணிக்குள் என்னென்ன நடக்கிறது என்பதை நீங்களே பார்த்திருக்க முடியும்.
நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவச் செல்வங்கள் மீது எந்த அளவிற்கு காவல்துறையின் மூலம் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது என்பதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இடதுசாரி இயக்கங்கள் போன்ற அமைப்புகள் போராடாமல் இருப்பதற்காக ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் இடதுசாரி மற்றும் பொதுவுடைமை இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், “இந்த அரசாங்கத்தை நடத்துவது யார்? எங்களுடைய தயவில்தான் இந்த அரசாங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
“இந்த அரசாங்கத்தை தலைமைச் செயலாளர் நடத்துகிறாரா அல்லது அரசாங்கமே நடத்துகிறதா என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும்” என்றும் அவர்கள் கேட்கிறார்கள். அடுத்ததாக, “எங்களுடைய தலைவர்தான் பிரதமர்” என்று அவர்கள் பேசுகிறார்கள். அதே கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த மாநிலத் தலைவர் அண்ணன் மாணிக்கம் தாகூர் அவர்கள், “இது ரசிகர் மன்ற மனப்பான்மையில் பேசுவது போல் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
இவ்வாறு அவர்களுடைய கூட்டணிக்குள் ஒரு சலசலப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, அந்த விவாதத்தை எவ்வாறு திசைதிருப்பலாம் என்பதைத்தான் அவர்கள் பார்க்கிறார்கள். அவர்கள் நினைத்த படி இப்போது என்னிடம் அந்த கேள்வி எழுப்பப்படுகிறது . இப்படி ஊடகத்தில் எதுவர வேண்டும் என அந்தத் தளத்தை அவர்களே உருவாக்கித் தருகிறார்கள். நாமும் அதை மறந்து, அதையே கையில் எடுத்துக்கொண்டு தலைப்பிட்டு விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு முறையும் பள்ளிக் கல்வித் துறை சார்ந்த மானியக் கோரிக்கையை நாங்கள் முன்வைக்கும் போது, அடுத்ததாக என்ன மாதிரியான திட்டங்களை கொண்டு வரப்போகிறோம், நம்முடைய குழந்தைகளை எவ்வாறு முன்னேற்றப் போகிறோம் என்பதையெல்லாம் விளக்குவோம்.
இன்றைக்கு அவர்கள் STEM குறித்து பேசினார்கள். அடுத்ததாக STEM-ல் STEAM வந்திருக்கிறது; அதில் கலை சார்ந்த கல்வியும் இணைக்கப்படுகிறது. இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியதுபோல, கணக்குப் பாடத்தைக்கூட கதை வடிவில் குழந்தைகளுக்குக் கற்பிக்கப் போகிறோம். இவ்வாறு பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம்.
மாநிலக் கல்விக் கொள்கையை கொண்டு வந்து, அதில் எதிர்காலத்திற்கான ரோட்மேப்பையும் கொடுக்க இருக்கிறோம். ஆனால், இவர்கள் இப்போது கூறுகின்ற அடுத்தடுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கான வாய்ப்பே இல்லை என்பதுபோல் பேசுவது சரியல்ல.
ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து திட்டமிட்டு செயல்படுத்திக்கொண்டிருக்கும்போது, அதற்குச் சம்பந்தமே இல்லாமல் ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பது தேவையற்றது.ஒரு கல்லூரியை நடத்தக்கூடிய ஒருவர், கேபிடேஷன் கட்டணம் என்றால் என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும். அவரே நடத்தக்கூடிய கல்லூரியில் ஏழை மாணவர்களிடம் கேபிடேஷன் கட்டணம் வசூலித்து கல்லூரி நடத்துபவர், எங்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைப்பதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது.அவர் எதைச் சொன்னாலும் ; அதை எதிர்த்து நிற்பதற்கும், எதிர்கொள்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அமைச்சர் மரியா வில்சன் பேசிய அந்தப் பேச்சு எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை. அவை முன்னவர் அது தொடர்பாக ஏன் எதுவும் பேசவில்லை என்பதும் தெரியவில்லை. சட்டப்பேரவைத் தலைவர் அதை எவ்வாறு அனுமதித்தார் என்பதும் தெரியவில்லை. அது ஏன் இன்னும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படவில்லை என்பதும் தெரியவில்லை. எனவே, அவர் உரிய விளக்கத்தைக் கேட்டு, உண்மையை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு சட்டப்பேரவைத் தலைவருக்கு இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.