வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஜூன் 4ல் ஆர்ப்பாட்டம்: சிபிஐ

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஜூன் 4ல் ஆர்ப்பாட்டம்: சிபிஐ
Updated on
1 min read

சென்னை: வணிக நிறுவனங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 4-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், “ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் ராணுவ ரீதியிலான தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருவதால், மேற்காசிய நாடுகளில் பதட்டம் நிலவுகிறது. ஹார்முஸ் நீரிணை வழியாக சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, எரிபொருள் தட்டுபாடு பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் கடந்த சில மாதங்களாக உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

தற்போது சென்னையில் 19 கிலோ எடை கொண்ட, வணிக நிறுவனங்களின் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.46 உயர்த்தப்பட்டு, ரூ.3,283-க்கு விற்கப்படுகிறது.

இதனால் உணவகங்கள், வணிக நிறுவனங்கள் மேலும் மேலும் மூடப்பட்டு வருகின்றன. ஒரு கோப்பை டீயின் விலை 50 விழுக்காட்டுக்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் உணவுப் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளன.

இந்த நெருக்கடிக்கும், விலை உயர்வுக்கும் ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணமாகும். மேலும், தனியார் எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு சாதகமான எண்ணெய் விலை நிர்ணயக் கொள்கையும், அதிகப்படியான அரசாங்க வரிகளுமே காரணமாகும். இந்த விலை உயர்வுக்கு ஒன்றிய பாஜக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக நிறுவனங்களின் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இக்கோரிக்கையை வலியுறுத்தியும், ஒன்றிய பாஜக அரசின் தவறான கொள்கையை கண்டித்தும் வரும் 4-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஜூன் 4ல் ஆர்ப்பாட்டம்: சிபிஐ
“முதல்வர் விஜய்யின் திருச்சி பேச்சு ஏமாற்றமளிக்கிறது” - அன்புமணி அதிருப்தி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in