

திண்டுக்கல்: பழநி அருகே தொப்பம்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தேங்காய் மட்டை ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முகக்கவசம் அணிந்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அடுத்த தொப்பம்பட்டியில் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று (சனிக்கிழமை) காலை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், அடிப்படை தேவைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கிராம மக்கள் எடுத்துரைத்தனர்.
இப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தேங்காய் மட்டை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு துகள்கள் காற்றில் பறப்பதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருவதாகவும், குறிப்பாக கால்நடைகள் உயிர் இழப்பதாகவும், இது குறித்து மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் தேங்காய் மட்டை ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக , கருப்பு கொடி காட்ட முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அனுமதி மறுத்ததால் அதை தவிர்த்தனர். பின்னர், கோரிக்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இதே போல், தாளையூத்து ஊராட்சியில் அத்துமீறி ஆய்வு செய்த தவெக நிர்வாகி மணிகண்டனை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கிராம சபை கூட்டத்தை நடத்தவிடாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.