“புதுச்சேரியில் முதல்வர், எம்எல்ஏக்களை தனியார் ஆலை அதிகாரிகள் மதிப்பதில்லை” - அமைச்சர் வருத்தம்

புதுச்சேரி பேரவை

புதுச்சேரி பேரவை

Updated on
1 min read

புதுச்சேரி: “முதல்வர், எம்எல்ஏக்கள் என யாரையும் தனியார் தொழிற்சாலை அதிகாரிகள் மதிப்பதில்லை. தனி ராஜ்ஜியம் நடத்துகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்” என்று அமைச்சர் ராஜவேலு வேதனை தெரிவித்துள்ளார்.

பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எம்எல்ஏ சாய் ஜெ.சரவணன்குமார் (தவெக) பேசுகையில், “இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்காக தொழிற்சாலைகளை கொண்டு வருகிறோம். ஆனால், தனியார் தொழிற்சாலைகளில் உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுப்பதில்லை. வெளியூரைச் சேர்ந்தவர்களுக்குதான் வேலை கொடுக்கிறார்கள்.

தனியார் தொழிற்சாலைகளில், புதுச்சேரி இளைஞர்களுக்கு இத்தனை சதவீதம் வேலை கொடுப்போம் என்ற உத்தரவாதம் தர வேண்டும்” என்றார்.

அப்போது அரசு கொறடா ஏ.கே..டி.ஆறுமுகம், “புதுச்சேரியில் இருப்பவர்களுக்கு தனியார் தொழிற்சாலைகளில் வேலை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

காங்கிரஸ் எம்எல்ஏ கார்த்திகேயன், “இப்பிரச்னையில் முதல்வர் தனிக்கவனம் செலுத்த வேண்டும். தனியார் தொழிற்சாலைகளில் உள்ள அதிகாரிகள் வெளியூரைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியூர் ஆட்களை வேலைக்கு வைக்கிறார்கள். உள்ளூரைச் சேர்ந்தவர்களை வேலைக்கு வைத்தால் சங்கம் வைத்து பிரச்சினை செய்வார்கள் என்ற பயத்தை உருவாக்கி விட்டார்கள். இதனால் ஒரு ‘டெஸ்ட்’ வைத்து தகுதி பெறவில்லை என உள்ளூர் மக்களை வெளியே தள்ளிவிடும் சதித்திட்டம் நடக்கிறது” என்றார்.

அதற்கு சாய் ஜெ.சரவணன்குமார், “எல்லோருக்கும் அரசு வேலை கொடுக்க முடியாது. தனியார் தொழிற்சாலைகள் ஏராளமாக இருந்தாலும், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவில்லை என்றால், குறை நம்மிடம்தான் உள்ளது” என்றார்.

அதற்கு அமைச்சர் ராஜவேலு, “என்னுடைய தொகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் கூட வெளியூரில் இருந்து வந்து ஆட்கள் வேலை செய்துவிட்டு செல்கின்றனர். என்னுடைய தொகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 5 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். இதில் 4,500 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். புதுச்சேரியில் உள்ளவர்களுக்கு வேலை கொடுத்தால், தொழிற்சங்கம் வைத்து, பிரச்சினை செய்வார்கள் என்ற காலம் மாறிவிட்டது. எனவே, தனியார் தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கு கட்டாயமாக வேலை வழங்க உத்தரவிட வேண்டும்” என்றார்.

அதற்கு, ஏ.கே.டி.ஆறுமுகம், “முதல்வர் நினைத்தால், தனியார் தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று உத்தரவு போடலாம். ஆனால், அதனை யார் அமல்படுத்துவது?” என்று கேள்வி எழுப்பினார். உடனே சாய்.ஜெ.சரவணன்குமார், “இளைஞர்கள் வேலையில்லாமல் இருந்தால் தீய பழக்க வழக்களில் ஈடுபடுவார்கள்” என்றார்.

அதற்கு அமைச்சர் ராஜவேலு, “தனியார் தொழிற்சாலையில் உள்ள அதிகாரிகள் நம் முதல்வர், எம்எல்ஏக்கள் என யாரையும் மதிப்பதில்லை. தனி ராஜ்ஜியம் செய்கிறார்கள். அவர்களை அழைத்தால் கூட வருவதில்லை. இந்த நிலை மாற வேண்டும்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>புதுச்சேரி பேரவை</p></div>
WTC இறுதிக்கு இந்திய அணி முன்னேறும் வாய்ப்பு எப்படி? - ஒரு விரைவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in