

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்
சென்னை: இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு (2025-27) முன்னேறும் வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து பார்ப்போம்.
கடந்த 2019 முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் 2019-21 மற்றும் 2021-23 என அடுத்தடுத்து இரண்டு முறை இந்திய அணி இறுதிக்கு முன்னேறியது. கடந்த 2023-25 சுழற்சியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது தென் ஆப்பிரிக்கா.
தற்போது 2025-27க்கான சுழற்சியில் சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்து பெற்று விளையாடி (ஐசிசி-யின் முழு நேர உறுப்பினர்களாக உள்ள அணிகள்) வரும் அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் முதல் இரண்டு இடம் பிடிக்கின்ற அணிகள் இறுதிக்கு முன்னேறும்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. இதில் இரண்டாவது போட்டி டிரா ஆனது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி இந்த தொடரில் 16 புள்ளிகளை பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் 24 புள்ளிகளை இந்தியா பெற்றிருக்கும்.
தற்போது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேறுவதற்கான புள்ளிப்பட்டியலில் 51.52 புள்ளிகள் சதவீதத்துடன் ஐந்தாம் இடத்தில் இந்திய அணி இருக்கிறது.
இந்த 2025-27 சுழற்சியில் இந்திய அணிக்கு இன்னும் 7 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே உள்ளது. அதில் இரண்டு போட்டிகள் நியூஸிலாந்தில் நடைபெறுகிறது. எஞ்சிய ஐந்து போட்டிகளும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா விளையாடுகிறது.
இந்த ஏழு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றால் சுமார் 70.37 சதவீதத்தை பெறும். அதுவே ஏழு போட்டிகளில் ஆறில் மட்டும் வெற்றி கண்டால் 64.8 சதவீதத்தை பெறும். அதோடு மற்ற அணிகளின் ஆட்டம் மற்றும் புள்ளிகளை பொறுத்தே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு அமையும். இதில் ஆஸ்திரேலிய உடனான தொடரில் இந்தியா பெறுகின்ற வெற்றி அந்த அணிக்கு மறுக்கப்பட்ட புள்ளிகளாக அமையும்.
ஏனெனில், இப்போதைக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான புள்ளிப் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் உள்ளது. இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க முடியும் என்ற சூழல் உள்ளது.