

திருவள்ளூர்: அமோனியா வாயுக் கசிவால் 18 பேரின் உயிரிழப்புக்கு காரணமான கன்னிகைப்பேர் கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்துக்கு, நேற்று வருவாய்த் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த மாதம் 21-ம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 83 பேரில், கடந்த 2-ம் தேதி இரவு வரை 18 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், விபத்து நடந்த தனியார் நிறுவனத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 400 டன் இறால் உள்ளிட்ட கடல் உணவுகள் சேமிப்பு கிடங்குகளுக்கு மாற்றப்பட்டது.
தொடர்ந்து, நிறுவனத்தில் உள்ள அமோனியா வாயுவை தொழில்நுட்ப வல்லுநர்களால் பாதுகாப்பாக அகற்றும் பணி கடந்த 4-ம் தேதி முதல், நேற்று முன் தினம் வரை நடைபெற்றது.
முதல் கட்டமாக, சேமிப்பு தொட்டிகளில் இருந்து, 2.9 டன் அமோனியா வாயு அகற்றப்பட்டது; 2-ம் கட்டமாக நிறுவனத்தின் குளிரூட்டும் அறை, பதப்படுத்தும் கிடங்கு உள்ளிட்ட இடங்களில் குழாய்களில் தேங்கியிருந்த 700 கிலோ அமோனியா வாயு, சல்பியூரிக் ஆசிட் மூலம் தூய்மைப்படுத்தி அகற்றப்பட்டது.
இச்சூழலில், திருவள்ளூர் ஆட்சியர் கவிதா உத்தரவின் பேரில், காவல்துறை, தீயணைப்பு, மீட்புத் துறையினர் உள்ளிட்ட துறையினர் முன்னிலையில், நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம், தொழிலாளர்கள் தங்கும் கூடம், உணவுப் பொருட்களை பதப்படுத்தும் கூடம், அமோனியா வாயு சேமிப்பு தொட்டிகள் அடங்கிய வளாகம் ஆகியவற்றுக்கு நேற்று திருவள்ளூர் கோட்டாட்சியர் ரவிசந்திரன் தலைமையிலான வருவாய்த் துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
மேலும், தனியார் நிறுவனத்தின் வளாகத்தில் சிறிய அளவிலான கழிவுகள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டிய பணிகள் இருப்பதால், அப்பணிகளை முடித்து, ஜூலை 9-ம் தேதி (இன்று) தனியார் நிறுவனத்தின் நுழைவாயிலை மூடி ‘சீல்’ வைக்கப்படும் என, கோட்டாட்சியர் ரவிசந்திரன் தெரிவித்துள்ளார்.