

தேமுதிக வேட்பாளர் அனகை முருகேசனை ஆதரித்து பல்லாவரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தபோது.
“எதிர்க்கட்சி அந்தஸ்து கூட அதிமுக-வுக்கு கிடைப்பது சந்தேகம்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
அம்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அ.பு.பூர்ணிமாவை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த், பாடியில் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: இன்றைய சூழலில் அரசியலுக்கு பெண்கள் வருவதே மிகவும் கடினம். அந்த வகையில், இன்றைக்கு ஒரு பெண் வேட்பாளரான பூர்ணிமாவுக்காக நான் பிரச்சாரம் செய்வதை நினைத்து உண்மையிலேயே ஒரு பெண்ணாக மிக மிக சந்தோஷப்படுகிறேன்.
பெண்கள் தான் இந்த நாட்டின் கண்கள் என மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அடிக்கடி சொல்வார். அதற்கேற்ப பெண்களுக்கான அதிகமான வாக்குறுதிகளை, தேர்தல் அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்திருக்கிறார்.
எதிர்கட்சித் தலைவர் ஃபிரிட்ஜ் தருவதாக சொல்லியிருக்கிறார். ஆனால், இன்றைக்கு அனைவரது வீட்டிலும் ஃபிரிட்ஜ் இருக்கிறது. அதேசமயம் திமுக வழங்கும் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பனை பயன்படுத்தி உங்களுக்கு வேண்டிய பொருளை வாங்கிக் கொள்ளலாம். அதேபோல் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்வு, உயர்கல்வி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி என ஏராளமான திட்டங்களை திமுக அறிவித்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் அம்பத்தூர் தொகுதியில் மொத்தமாக ரூ.880 கோடியில் சாலை பணிகள், பாடி குப்பம் ரயில் நிலையம் மேம்பாலம், மழைநீர் வடிகால், விளையாட்டு திடல், பூங்காக்கள் என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் எத்தனை முனை போட்டி நிலவினாலும் எதிரில் இருப்பவர்களுக்கு கூடத் தெரியும், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று.
அதிமுக-வுக்கு எதிர்கட்சி அந்தஸ்து கூட கிடைக்குமா என்பது சந்தேகம். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் ஆசியுடன் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.இதே போல் தேமுதிக வேட்பாளர் அனகை முருகேசனை ஆதரித்து பல்லாவரத்திலும் நேற்று பிரேமலதா பிரச்சாரம் மேற்கொண்டார்.