

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என அறிவித்திருப்பதன் மூலம், கடந்த 4 நாட்களாக கோவையில் அரசியல் கட்சிகள் மத்தியில் அண்ணாமலையை மையப்படுத்தி எழுப்பப்பட்டு வந்த விவாதங்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன.
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வான வானதி சீனிவாசன், கடந்த முறை அங்கே பார்டரில் பாஸானார். அதனால் இம்முறை கோவை வடக்கு தொகுதிக்கு மாறும் திட்டத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பே அங்கே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார். அதேசமயம் அண்ணாமலை கவுண்டம்பாளையம் அல்லது சிங்காநல்லூர் தொகுதிகளை எதிர்பார்த்தார். ஆனால் அதிமுக, அந்தத் தொகுதிகளை பாஜக-வுக்கு ஒதுக்கத் தயாராக இல்லை. இதனால் கோவை வடக்கிலேயே அண்ணாமலை போட்டியிடுவாரா என்று சிலர் விவாதங்களை எழுப்பினார்கள்.
முகநூல் பக்கத்தில் ‘கட்சியில் உழைத்த அண்ணாமலைக்கு சீட் இல்லையா?’ என்றும், ‘வெற்றிபெற்ற தொகுதியிலேயே ஒன்றும் செய்யாதவருக்கு மீண்டும் வாய்ப்பா?’ என்றும் அண்ணாமலைக்கு ஆதரவாகவும் வானதிக்கு எதிராகவும் பாஜக-வினரே பதிவுகளை போட்டனர். இதனிடையே அண்ணாமலையை மொடக்குறிச்சி தொகுதியில் நிறுத்த பாஜக தரப்பில் முயற்சிக்கப்பட்டதாகவும் அண்ணாமலை அதை மறுத்துவிட்டதாகவும் செய்திகள் பரவின.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவை பாஜக நிர்வாகிகள் சிலர், “இந்தத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் அதிகமான எம்எல்ஏ-க்கள் இம்முறை சட்டசபைக்குச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அண்ணாமலை. ஆனால், அவர் எதிர்பார்த்தது இப்போது நடக்காது போல் தெரிகிறது. ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலும் தொகுதிகள் எண்ணிக்கையிலும் அண்ணாமலைக்கு திருப்தி இல்லை.
அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பளிக்காமல் ஒதுக்கிவிட்டார்கள். இந்த நிலையில், தற்போது கோவை வடக்கில் போட்டியிடும் வானதியை ‘அண்ணாமலை அன்புக் கூட்டம்’ புறக்கணித்தால் அவரது வெற்றி கேள்விக்குறியதாகி விடும். அதனால் அண்ணாமலையை சமாதானப்படுத்தும் வேலைகள் நடந்து வருகிறது” என்றனர்.
இந்த நிலையில், அண்ணாமலையின் பழைய வீடியோ ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், “பாஜக-வுக்காக பலர் உழைத்து உயிரிழந்துள்ளனர். ஒரு எம்எல்ஏ, எம்பி மற்றும் முதல்வர் பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. ஐபிஎஸ் பதவியை உதறிவிட்டு வந்துள்ளேன். டெல்லிக்கு மேலாளராக என்னால் வேலை பார்க்க முடியாது. நான் இருக்கும் வரை இப்படித்தான் இருப்பேன்” என அண்ணாமலை பேசி இருப்பது தற்போதைய சூழலுக்கு பொருத்தமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.