

சென்னை: “முதல்வர் வருகைக்காக புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகளின் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமா? மாணவர்களின் எதிர்காலத்தை விட, முதல்வரின் வருகை முக்கியமானதா?” என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவிருந்த தேர்வுகள், முதல்வர் விஜய் புதுக்கோட்டை வருகையை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
புனரமைக்கப்பட்ட புதுக்கோட்டை பேருந்து நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக முதல்வர் வருகிறார் என்பதற்காக, மாணவிகளின் தேர்வுகளை ஒத்திவைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பல மாதங்களாக வகுப்பறைகளில் படித்து, தேர்வுக்காகத் திட்டமிட்டு தயாராகி வந்த மாணவிகளின் கல்வி நடவடிக்கைகளை, ஒரு அரசு நிகழ்ச்சிக்காகத் தடை செய்வது எந்த வகையில் நியாயம்? முதல்வரின் வருகைக்காக மாணவர்களின் தேர்வை ஒத்திவைத்தது யார்? மாணவர்களின் எதிர்காலத்தைவிட பேருந்து நிலையத் திறப்பு விழா முக்கியமானதா?
அரசு நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்வது அரசின் பொறுப்பு. அதற்காக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளையும் தேர்வுகளையும் பாதிப்பது, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
மாணவர்களின் கல்வி தொடர்பான முடிவுகள் வாய்மொழி உத்தரவுகளால் நடத்தப்படுமா? தேர்வுகளை ஒத்திவைக்க அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியிடப்பட்டதா? யார் உத்தரவின் அடிப்படையில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது?
இது குறித்து கல்லூரி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகளும் உடனடியாக வெளிப்படையான விளக்கத்தை அளிக்க வேண்டும். முதல்வர் வருகை என்பது அரசின் நிகழ்ச்சி. ஆனால், மாணவர்களின் கல்வி என்பது அவர்களின் வாழ்நாள் எதிர்காலம். அரசின் நிகழ்ச்சிகளுக்காக மாணவர்களின் கல்வியைப் பாழக்கும் நிலை உருவாகக் கூடாது.
பேருந்து நிலையத்தைத் திறப்பதற்காக அரசு விழா நடத்தலாம். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யலாம். ஆனால் அதற்காக மாணவர்களின் தேர்வை ஒத்திவைப்பது என்றால், அரசு விழாவை நடத்துவதற்காக மாணவர்களின் எதிர்காலத்தையே ஒத்திவைப்பதாகிவிடும்.
இனிவரும் காலங்களில் எந்தவொரு அரசியல் நிகழ்ச்சிக்காகவும் மாணவர்களின் தேர்வுகள், வகுப்புகள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில் அரசு உறுதியான நடைமுறைகளை வகுக்க வேண்டும்.
எனவே, புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். தேர்வு ஒத்திவைப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்பதோடு, குறிப்பிட்ட தேதியிலேயே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.