போக்குவரத்து, ஆம்புலன்ஸ், சுகாதாரம் உட்பட புதிதாக 7 துறையினருக்கு தபால் வாக்கு வசதி

தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சட்டப்பேரவை தேர்தலில் ஆம்புலன்ஸ் சேவை, அரசுப் போக்கு வரத்து கழகம், சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட 7 துறையினருக்கு தபால் வாக்கு வசதி புதிதாக வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் மாற்றுத் திறனாளிகள் என வகைப்படுத்தப்பட்டோர் தபால் வாக்கு மூலம் தங்கள் வாக்கைச் செலுத்தலாம். இத்தகைய வாக்காளர்கள், தேர்தல் அறிவிக்கை வெளியான 5 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பிஎல்ஓ மூலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ‘12டி’ படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். வாக்கு சேகரிக்கும் குழுவினர் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகளை சேகரிப்பார்கள்.

தேர்தல் நாளில் அத்தியாவசியப் பணிகளில் இருக்கும் வாக்காளர்கள், தங்கள் துறையின் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் மூலம் தபால் வாக்கு வசதிக்கு விண்ணப்பிக்கலாம். தீயணைப்பு, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, ஆம்புலன்ஸ், விமானப் போக்குவரத்து, அரசு சாலைப் போக்குவரத்துக் கழகங்கள் ஆகிய 7 துறைகள் புதிதாக இந்த வசதியின்கீழ் வருகின்றன.

தேர்தல் பணியில் இருக்கும் வாக்காளர் தனது தபால் வாக்கைப் பெற்று, அதில் தனது வாக்கை பதிவு செய்து, வசதி மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ராணுவம், துணை ராணுவம், காவல் உள்ளிட்ட சேவைத் துறையில் இருக்கும் வாக்காளர்களுக்கு, வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டதும் மின்னணு முறையில் தபால் வாக்குகள் அனுப்பப்படும். இதற்கான தபால் செலவை அவர்கள் ஏற்க வேண்டியதில்லை.

பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் நாளான மே 4-ம் தேதி காலை 8 மணிக்குள் தேர்தல் அலுவலர்களை சென்றடைய வேண்டும். மேற்கண்ட விதிகள் குறித்து அரசியல் கட்சிகள், போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் விளக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
5 தலைநகரங்கள், தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றம்: நாதக தேர்தல் வாக்குறுதிகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in