

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்னையில் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். உடன் கட்சி நிர்வாகிகள்.படம் : எல்.சீனிவாசன்
தமிழகத்தில் புதிதாக 5 தலைநகரங்கள் உருவாக்கப்படுவதுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மாற்றப்படும் என்றும் சட்டப்பேரவை திருச்சிக்கு மாற்றப்படும் எனவும் நாம் தமிழர் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, ஏற்கெனவே 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவித்து தேர்தலுக்கான களப் பணிகளை தொடங்கிவிட்டது. இந்நிலையில் கட்சியின் தேர்தல் அறிக்கையை ‘ஆட்சி செயற்பாட்டு வரைவு 2026’ ஆக, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நேற்று வெளியிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாம் தமிழர் கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும். நிர்வாக தலைநகராக திருச்சியும், தொழில்நுட்ப தலைநகராக சென்னையும், தொழில் வணிக தலைநகராக கோவையும், மொழி பண்பாட்டு தலைநகராக மதுரையும், தமிழர் மெய்யியல் தலைநகராக கன்னியாகுமரியும் செயல்படும். தலைமைச் செயலகம், சட்டப்பேரவை திருச்சிக்கு மாற்றப்படும். அரசு முத்திரை, தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றப்படும். தன்னலமற்ற, அன்பான, சர்வாதிகார ஆட்சிமுறை நடத்தப்படும்.
ஆரம்ப கல்வி முதல் பிஹெச்டி வரை அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்கப்படும். பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கிடையாது. தமிழ் பயிற்று மொழியாகவும், ஆங்கிலம் கட்டாய பாடமாக பயிற்றுவிக்கப்படும். ஒரு மொழிக் கொள்கை பின்பற்றப்படும். அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும். 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி கொண்டு வரப்படும். பெண்களுக்கு தனித் தொகுதி கேட்டு பெறப்படும்.
மாநிலத்தில் பெறப்படும் வரிகளில் மாநில அரசுக்கு 75 சதவீதமும், மத்திய அரசுக்கு 25 சதவீதமும் என பிரிக்கப்படும். குடிநீர் விற்பனை தடை செய்யப்பட்டு, அனைவருக்கும் தூய குடிநீர் கட்டணமின்றி வழங்கப்படும். வேளாண்மை, ஆடு, மாடு வளர்த்தல் போன்றவை அரசு வேலையாக அறிவிக்கப்படும். பலகோடி பனைத் திட்டம் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். தமிழ்வழி மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும். திருநங்கை, திருநம்பிகளுக்கு தனி மருத்துவனை திருச்சியில் அமைக்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட்டு, உள்ளாட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே அரசு மருத்துவமனைகளில் தான் மருத்துவம் செய்யவேண்டும், அவர்களது குழந்தைகள் அரசு பள்ளிகளில் தான் படிக்கவேண்டும் என சட்டம் இயற்றப்படும். விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு சமவாய்ப்பு, அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சரிபாதி வேலைவாய்ப்பு, தமிழ்குடிகளுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும்.
பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை, மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை, முழுமையான பூரண மதுவிலக்கு, உழவர்களே உணவு பொருட்களுக்கு விலை தீர்மானிக்கும் உரிமை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை நாங்கள் அளித்திருக்கிறோம்.
நாங்கள் வெட்டி பேச்சு பேசுபவர்கள் அல்ல. நாங்கள் மெதுவாக வந்தாலும் எல்லோருக்கும் பொதுவாக வருவோம். ஆனால் பின்னோக்கி செல்ல மாட்டோம். நல்ல அரசை அமைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.